மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

பிகில் உண்மையான வசூல்!

பிகில் உண்மையான வசூல்!

2019 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 25 அன்று வெளியானது. பிகில் ஆடியோ வெளியீட்டில் தமிழக ஆட்சித் தலைமையை மறைமுகமாக விமர்சனம் செய்ததன் காரணமாக படம் வெளியாவதில் அரசால் தடைகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தணிக்கைச் சான்றிதழ் பெற்று அக்டோபர் 25 அன்று பிகில் ரிலீஸாவது உறுதியானது.

தமிழகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் பிகில் படம் திரையிடப்பட்டது. படத்தின் தமிழக விநியோக உரிமை சுமார் 81 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியிருந்தது. சுமார் 170 கோடி ரூபாய் தமிழக திரையரங்குகள் மூலம் வசூலானால் மட்டுமே 81 கோடி ரூபாய் அசல் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருந்தனர்.

படம் வெளியான முதல்நாள் வரலாறு காணாத ஓப்பனிங் வசூல் மழை என்று விஜய் படங்களின் புரமோட்டர்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். முதல் வார முடிவில் தமிழகம் முழுவதும் 95 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த பிகில், அடுத்து வந்த இரு வாரங்களில் 46 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 21 நாட்களில் 150கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார்(148 கோடி ரூபாய் மொத்த வசூல்), மெர்சல்(135 கோடி ரூபாய் மொத்த வசூல்) ஆகிய இரண்டு படங்களைக் காட்டிலும் பிகில் திரைப்படம் கூடுதல் வசூல் செய்து சாதனை படைத்துவிடும். இருப்பினும் படத்தின் பட்ஜெட் அதனை வியாபாரம் செய்த முறை இவற்றின் காரணமாக படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ஸ்கிரீன் சென் நிறுவனத்திடமிருந்து ஏரியா உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி ஏரியா உரிமைகளை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு தற்போதைய நிலவரப்படி 20% முதலீட்டு தொகையில் நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சென்னை, சேலம் ஏரியா விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. எஞ்சியுள்ள வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருநெல்வேலி ஏரியா உரிமை வாங்கியவர்களுக்கு 10% நஷ்டம் ஏற்படும்.

படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வெளியீட்டிற்கு முன்பாக படத்தைப் பற்றிய முன்னோட்டங்கள், பட்ஜெட் பற்றி பரபரப்பான செய்திகளை வழங்கி வந்தனர். படத்தின் வியாபாரத்தைப் பற்றி பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் பற்றிய தகவல்களை இன்று வரையிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் மூன்று வாரங்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்யக்கூடிய படம் பிகில் மட்டுமே.

இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கதாநாயக நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான மூன்றாவது நாளே சக்ஸஸ் மீட் நடத்துவது கோடம்பாக்கத்தில் கவுரவமாக கருதப்படுகிறது. ஆனால் வசூல் சாதனை நிகழ்த்திய பிகில் படக்குழுவினர் படம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர், படம் வெளியான பின்னர் அப்படம் சம்பந்தப்பட்ட எந்தவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் விசாரித்த பொழுது தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது பிகில் திரைப்படம் என்றனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon