மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

தென்பெண்ணையில் கர்நாடகா அணை: தமிழக அரசின் மனு தள்ளுபடி!

தென்பெண்ணையில் கர்நாடகா அணை: தமிழக அரசின் மனு தள்ளுபடி!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளமும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளமும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளமும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளமும் பாய்ந்து, இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடக-தமிழக எல்லையையொட்டி தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் அணை கட்ட முடிவு செய்த கர்நாடக அரசு, அதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டுவந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “தென்பெண்ணை ஆற்றில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறுகிறது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில்மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு, “குடிநீர் தேவைகளுக்காகவே அணை கட்டி வருகிறோம். மார்கண்டேய ஆறு கர்நாடகத்திற்கு உரியது. அதற்கு தமிழகம் உரிமை கோர முடியாது” எனத் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon