மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: கல்யாண ரசம்

கிச்சன் கீர்த்தனா: கல்யாண ரசம்

ரசம் நம் தென்னிந்திய உணவு வகையில் ஒரு முக்கிய இடம் பிடித்த உணவு. இது இல்லாத விருந்துகளே இருக்காது. இது ஜீரணத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் மற்றும் கபம், சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. ரசத்தில் பலவகை இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்தமானது கல்யாண வீடுகளில் செய்யப்படும் ரசமே. அதன் சுவையே மிக அலாதியானது. அது போன்ற சுவையான கல்யாண ஸ்டைல் ரசத்தை வீட்டில் செய்ய அனைவருமே விரும்புவார்கள்.

என்ன தேவை?

புளி - பாதி எலுமிச்சை அளவு (கரைத்து வைக்கவும்)

பூண்டு - 10 பல் (தோலுடன் தட்டி வைக்கவும்)

தக்காளி - ஒன்று (இதைப் புளிக் கரைசலில் நன்கு கையால் மசித்து விடவும்)

தாளிக்க: கடுகு, சீரகம் - சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

பச்சைமிளகாய் - ஒன்று

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கல்யாண ரசப் பொடி - 3 டீஸ்பூன்

ரசப் பொடிக்குத் தேவையானவை

துவரம் பருப்பு - 250 கிராம்

மிளகு - 75 கிராம்

சீரகம் - 75 கிராம்

தனியா (மல்லி) - 30 கிராம்

காய்ந்த மிளகாய் - 20

காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் - 10 கிராம்

மஞ்சள் தூள் - 4 டீஸ்பூன்

இதில் மஞ்சள் தூள் தவிர்த்து மீதி அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் மஞ்சள் தூளை கலந்து ஒரு பாத்திரத்தில் ஸ்டோர் செய்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

எப்படிச் செய்வது?

புளியை நன்கு கரைக்கவும். அதில் இடித்துவைத்த பூண்டு, நடுவில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பிசையவும். இதில் 3 அல்லது 4 டீஸ்பூன் ரசப்பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி உப்பு காரம் சரிபார்க்கவும். அதிக காரம் தேவைப்படுவோர் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்க்கவும். இதை நன்றாக 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் மூடி விடவும். சுவையான கல்யாண ரசம் தயார்.

குறிப்பு

பொதுவாக ரசத்தைக் கொதிக்க வைப்பதில்லை. ஆனால், இந்தக் கல்யாண ரசத்தை 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும் அப்போதுதான் சுவை அதிகரிக்கும்.

நேற்றைய ரெசிப்பி: கர்நாடகா ரசம்

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது