மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

சர்க்கரை நோய்க்குத் தீர்வு! வாழ்க்கை முறை மாற்றம்!

சர்க்கரை நோய்க்குத் தீர்வு!  வாழ்க்கை முறை மாற்றம்!

டாக்டர். விஜய்பாபு பாலகிருஷ்ணன், சர்க்கரை மற்றும் உட்சுரப்பியல் நிபுணர்

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி சர்க்கரை நோய்க்கு நன்றாகவே பொருந்தும். 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்தோடு சர்க்கரை நோயும் மிகவேகமாக அதிகரித்து விட்டது.

மிக வேகமாகப் பெருகி வரும் நோய்களின் பட்டியலில் சர்க்கரை நோய் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 10 வருடங்களில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைமுறைத் தடுமாற்றம்

கடந்த 50 வருடங்களில் நம் நாடு பல தளங்களில் முன்னேறியுள்ளது. இந்த அதிநவீன மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை சர்க்கரை நோய் பெருகி வர காரணமாக அமைந்துள்ளது.

ஒருபுறம் நமது பாரம்பரிய உணவு முறையை மறந்து அதிக மாவுச்சத்து மிக்க மேற்கத்திய உணவு உட்கொள்வதும் இன்னொருபுறம் புதிய நவீன இயந்திரங்களின் உதவியால் மனித உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதும் முக்கியக் காரணங்கள். வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரித்து அதன் பக்கவிளைவாக தூக்கமும் குறைந்துள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் நம் உடலால் இந்த வாழ்க்கைமுறை தடுமாற்றத்தை தாங்க முடியாமல் சர்க்கரை நோயாக வெளிப்படுகிறது.

உதாரண லட்டு

இதை எளிய முறையில் புரிந்து கொள்ள உதாரணம் தருகிறேன். நான் உங்களுக்கு ஒரு லட்டு கொடுத்தால் ஆசையோடு ருசித்து சாப்பிடுவீர்கள். அடுத்து 5 லட்டு கொடுத்தால் சந்தோஷம் குதூகலத்தில் மீதமின்றி சாப்பிட்டு முடித்து விடுவீர்கள். இப்போது மேலும் 20 லட்டு கொடுத்து சாப்பிடச் சொன்னால் என்னை ஒரு முறை சந்தேகக் கண்ணோடு பார்த்துவிட்டு உங்களுக்கு இஷ்டப்பட்ட லட்டை கஷ்டப்பட்டு சாப்பிட முயற்சிப்பீர்கள்.

கடைசியில் 100 லட்டு கொடுத்து உடனே சாப்பிட வற்புறுத்தினால் திணறிப்போய் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்து உடல் சுகமில்லாமல் ஆகிவிடும். இதுதான் சர்க்கரை நோய்.

வருடக்கணக்கில் மாவுச்சத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் நம் உடல் திணறிப் போய் செய்வதறியாது அதை எதிர்கொள்ள தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட நிலைதான் சர்க்கரைநோய்.

இப்போது சர்க்கரை நோய் உண்டாகக் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதற்கான தீர்வு என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இரண்டு வழிகள்

நம் உண்ணும் உணவில் உள்ள மாவுச் சத்து வயிற்றில் செரிமானமாகி சர்க்கரையாக ரத்தத்தில் நுழைகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் திசுக்கள் மீது வேலை செய்து சர்க்கரை, ரத்தத்தில் இருந்து திசுக்களுக்குள் நுழைய பயன்படுகிறது.

நாம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து உண்ணும்போது திசுக்கள் அதை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றது. அதன் விளைவாக திசுக்கள் தன்மீது இன்சுலின் வேலை பார்ப்பதை எதிர்த்து ரத்தத்திலிருந்து சர்க்கரை தனக்குள் நுழைவதை குறைத்துவிடுகிறது.

இதனால் சர்க்கரை ரத்தத்திலேயே தங்கி விட அதன் அளவு அதிகமாகி சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது.

ரத்தத்தில் அதிகமாக உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இரு வழிகள் உண்டு. முதலாவது சர்க்கரையை வலுக்கட்டாயமாக ரத்தத்தில் இருந்து திசுக்களுக்குச் செல்ல வழிவகை செய்தால் சர்க்கரை அளவு குறையும். சர்க்கரை நோய்க்கான மருந்துகள் அனைத்துமே இப்படித்தான் உடலில் வேலை செய்கின்றன.

இரண்டாவது வழி... வயிற்றிலிருந்து, செரிமானமான சர்க்கரை ரத்தத்தில் நுழைவதை குறைப்பதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்க முடியும். வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் உணவில் உள்ள மாவுச்சத்தை குறைப்பதால் இது சாத்தியமாகிறது. இந்த இரு வழிகளில் எது சரியான தீர்வு என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

100 லட்டு சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்தும் போது வலுக் கட்டாயமாக அனைத்து லட்டுகளையும் சாப்பிட வைப்பதை விட, ஐந்து லட்டாக சாப்பிடுவதைக் குறைப்பதே புத்திசாலித்தனமான தீர்வாகும்.

'உணவே மருந்து மருந்தே உணவு' என்பதை புரிந்து கொண்டால் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம்.

(நவம்பர் 14 ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று இது தொடர்பான விழிப்புணர்வுப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன)

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon