மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 20 ஜன 2020

சிவசேனா கோரிக்கைகளை ஏற்க முடியாது: அமித் ஷா

சிவசேனா கோரிக்கைகளை ஏற்க முடியாது: அமித் ஷா

சிவசேனாவின் கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து தேர்தலுக்குப் பின், முதன் முறையாக தனது கருத்தைக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த போதும், அந்த கட்சியாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை.

இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, செவ்வாய் கிழமை(நவம்பர் 12) மாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று(நவம்பர் 13) காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ‘பொதுவான குறைந்தபட்ச திட்டம்’ குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தில் தொடக்கம் முதல் சிவசேனா, பாஜக இடையிலான பிரச்சினையில் அமித் ஷா கருத்துத் தெரிவிக்காமல் இருந்தார். இதனால், சிவேசேனா கடும் அதிருப்தியில் இருந்து வந்தது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் அமித் ஷா அமைதி காப்பது குறித்து தங்கள் விமர்சனங்களை ஏற்கனவே வைத்துள்ளனர். சிவசேனா தரப்பில், ‘தேர்தலுக்கு முன் பேசிய அமித் ஷா இப்போது பேச்சுவார்த்தைக்கு வராதது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக அமைதி காத்த பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, நேற்று(நவம்பர் 13) இரவில் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேர்தலுக்கு முன் நானும், பிரதமர் மோடியும் நமது கூட்டணி வென்றால், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்று பலமுறை தெரிவித்திருந்தோம். அப்போது ஒருவர்கூட எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது புதிய கோரி்க்கைகளுடன் சிவசேனா எங்களிடம் பேசுகிறது, இதை ஏற்க முடியாது.

ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி போதுமான அவகாசம் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். இதற்குமுன் எந்த மாநிலத்திலும் மகாராஷ்டிராவில் கொடுக்கப்பட்ட அளவுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. இங்கு 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்த பின்புதான் ஆட்சி அமைக்க ஒவ்வொரு கட்சியாக அழைத்தார்.

சிவசேனா, காங்கிரஸ்-என்சிபி, எங்களால் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. இன்றுகூட எந்த கட்சியிடமும் பெரும்பான்மைக்கு தேவையான அளவு உறுப்பினர்கள் இருந்தால் ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்கக் கோரலாம். நான் சொல்லவிரும்புவதெல்லாம், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்திவிட்டார்கள் என்று கூறி கொந்தளிப்பதெல்லாம் அர்த்தமற்றது, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக மட்டுமே தவிர வேறு எதுவும் இல்லை.

தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போதுமான அவகாசத்தை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி, செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் தங்களால் ஆளுநருக்கு அளித்த இரவு 8.30 மணி காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாது என்று கடிதம் எழுதியது. அதன்பின் இரவு 8.30 மணிவரை குடியரசுத்தலைவர் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதால், மாலையே குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் மற்ற எந்தக் கட்சியை விடவும் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கட்சி என்றால் அது பாஜக தான். எதிர்கட்சிகளுக்கு இதனால் எந்த இழப்புமில்லை. ஜனாதிபதியின் ஆட்சியைப் பற்றி தவறான கருத்தை உருவாக்குவதன் மூலம் அவர்கள் பொது அனுதாபத்தைப் பெற விரும்பினால், அவர்கள் பொதுமக்களின் அறிவை நம்பவில்லை என்று அர்த்தம்.

ஆளுநர் யாருக்கும் வாய்ப்பை மறுக்கவில்லை. கபில் சிபல் போன்ற ஒரு கற்றறிந்த வழக்கறிஞர், ‘எங்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது’, போன்ற குழந்தைத்தனமான வாதங்களை முன்வைக்கிறார்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை வெளியிடுவது எங்கள் கட்சியின் பாரம்பரியத்தில் இல்லை. கிளர்ச்சி செய்து மக்களின் அனுதாபத்தைப் பெற முடியும் என்று சிவசேனா நினைத்தால், அவர்களுக்கு உண்மையில் பொதுமக்களைப் பற்றி தெரியாது என்று தான் அர்த்தம்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon