மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: குழந்தைகளின் மீதான நுழைவுத் தேர்வையாவது தடுத்து நிறுத்த மாட்டோமா?

சிறப்புக் கட்டுரை: குழந்தைகளின் மீதான நுழைவுத் தேர்வையாவது தடுத்து நிறுத்த மாட்டோமா?

பேரா.நா.மணி

“நீட் தேர்வு ஏழை எளியோரை நிர்மூலம் செய்கிறது. நீட் சமூக நீதிக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது” என்ற குரலுக்கு நீதிபதிகள் வரை ஆதரவு பெருகிவருகிறது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் உள்ள எந்த நியாயத்தையும் உள்வாங்காமல் அடிப்படைக் கல்வியிலிருந்தே ஏழை எளியோரை நெட்டித் தள்ளும் முயற்சி கனகச்சிதமாக நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி பிஞ்சுக் குழந்தைகளை எந்தவித இரக்கமும் இன்றி மழலையர் வகுப்புகளிலேயே தேர்வு என்ற பெயரில் பரிசோதனை செய்யும் போக்குகள் எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படாமல் நடந்தேறி வருகிறது.

2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்திலேயே பள்ளிச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகள் கூடாது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அச்சட்டம் நிறைவேறி பத்தாண்டுகள் கழிந்த பின்னரும்கூட மழலையர் வகுப்புகளுக்கே நுழைவுத் தேர்வுகள் தொடரத்தான் செய்கிறது. இதைக்கூட ஏன் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. மழலையர் வகுப்புக்குச் செல்லும் மூன்றரை வயதுக் குழந்தையிடம் எதைச் சோதித்து இவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

எல்.கே.ஜி சேர்க்கை வேண்டி நண்பர் ஒருவர் ஈரோடு நகரின் பிரபலமான பள்ளியில் விண்ணப்பித்து இருந்தார். நேர்முகத் தேர்வுக்கு வரும்படி பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பு அலைபேசி வழியாக வந்தது. விவரத்தைக் கேட்டவுடன். “ஏங்க கல்வி உரிமைச் சட்டம் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வெல்லாம் கூடாது” என்று நண்பர் லேசாக முனகி இருக்கிறார். “அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். நீங்க வந்துருங்க. சொல்லச் சொல்லியிருக்காங்க சார்” என்று கூறிவிட்டு அலைபேசியைத் துண்டித்து விட்டார்.

தேர்வு நாளன்று காலையில் நண்பருடன் நாமும் சென்றிருந்தோம். அங்கிருந்த விளையாட்டு உபகரணங்களைப் பார்த்து குழந்தைகள் விளையாட முயற்சி செய்து கொண்டு இருந்தது. பெற்றோர்கள் கண்டிப்பான குரலில் அவர்களை அடக்கிக்கொண்டு இருந்தார்கள். எங்கே விளையாட்டு வழியாகத் தேர்வில் கோட்டை விட்டுவிடப் போகிறது என்ற அச்சமா? விளையாட்டுப் பிள்ளை என்று மதிப்பெண்ணைக் குறைத்து விடுவார்கள் என்ற அச்சமா? தெரியவில்லை. பல பெற்றோர்கள் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்பே பள்ளிக்கு வந்து என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று தெரிந்துகொண்டு சென்றிருந்தனர். தாங்கள் கேட்டதை அடிப்படையாகக்கொண்டு குழந்தையைக் கசக்கி பிழிந்து தயார் செய்து கொண்டுவந்த பெற்றோர் இருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்கள் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தால் அவர்கள் வழி தகவல்கள் திரட்டி குழந்தைகளைத் தயார் செய்து கொண்டு வந்தவர்கள் இருந்தார்கள். இது எதுவும் இல்லாமல் அல்லது தெரிந்து கொள்ளாமல் நேரிடையாக குழந்தையை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து வந்துவிட்ட தந்தையர்களை தாய்மார்கள் வசைபாடிக் கொண்டும் இருந்தார்கள். நண்பரின் குழந்தைக்கான நேர்முகத் தேர்வு தருணம் வந்தது. முதலில் “தம்பி குதி” என்றார் ஆசிரியர். அந்தப் பையன் “மேல இருந்து தானே ஆன்ட்டி குதிக்க முடியும்...” என்றான். வகுப்பறைக்குள் நின்று கொண்டு குதி குதி என்றால் எப்படிக் குதிக்கும் குழந்தை? தன் வீட்டில் வெளியே ஏறிக் குதித்து விளையாடி, குழந்தைக்குப் பழக்கம் இருக்கும். சமதளத்தில் நின்று கொண்டு அல்லது வகுப்பறையில் நின்று கொண்டு எப்படி குதிப்பது என்று குழந்தைக்குத் தெரியவில்லை. “அப்படியே குதி, அப்படியே குதி” குழந்தையின் தாய் அதட்டினார். குழந்தை ‘திருதிரு’வென விழித்தது. ஒருவழியாக ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றியது குழந்தை. எல்லோருக்கும் ‘அப்பாடா’ என்று ஆனது. ஆனால், எல்.கே.ஜி குழந்தைகளைச் சமதளத்தில் நின்று குதிக்க சொல்வது என்ன தேர்வு முறை? அப்படி ஒரு குதிப்பு இருக்கிறது என்று தெரியாத குழந்தை எப்படிக் குதிக்கும்? ஏன் இந்தத் தேர்வு? ஒருவேளை அந்தக் குழந்தை குதிக்காமல் போயிருந்தால்! மழலையர் வகுப்பு சேர்க்கை அவ்வளவுதானா? பள்ளியில் சொல்லும் பாடங்கள் இந்தக் குழந்தைக்குப் புரியாது என்று பொருளா? அதுவும் தெரியவில்லை.

அடுத்து சாக்பீஸைக் கையில் கொடுத்து, “ஒரு வட்டம் வரை” என்றார் அந்த ஆசிரியர். குழந்தைக்கு வட்டம் போட வரவில்லை. இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்தி விட்டு கண நேரம் நீங்கள் ஒரு வட்டம் போட்டுப் பாருங்கள். எத்தனை பேர் மிகச் சரியான வட்டம் போடுகிறீர்கள் என்று பார்ப்போம். பெரியவர்களுக்கே வட்டம் இவ்வளவு பெரிய விவகாரம் எனும்போது குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும்? குழந்தைகள் வட்டம் வரைதல் மிகவும் கடினம். அதிலும் எந்தவிதமான பயிற்சியும் இன்றி எப்படி வட்டம் போட முடியும்? இவ்வளவு பெரிய சவால் குழந்தைக்கு எதற்கு என்று கேட்க மனம் பதைபதைத்தது. ஆனால், கேட்க முடியாது. உங்கள் நண்பரால் என் பிள்ளை அட்மிஷன் பாழ் என்ற அவச்சொல் காலமெல்லாம் நிலை பெற்றுவிடும். நாம் ஏன் உடன் வந்தோம் என்று என்னை நானே நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது. குழந்தை முதலில் வட்டத்தின் மேற்கூரையை மட்டும் வரைந்தது. நடுவில் ஒரு கோட்டை இழுத்து ‘A’ என்றது. என் மனம் குதூகலித்தது. ‘ஆஹா என்ன கிரியேட்டிவிட்டி குழந்தைக்கு!’ என்று மனம் துள்ளியது. ஆனால் ஆசிரியர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பெற்றோர் முகத்தில் படபடப்பு. அதை அழித்துவிட்டு மீண்டும் “வட்டம் போடு” என்றார் ஆசிரியர். குழந்தை இந்த முறை வட்டத்தைக் கீழிருந்து தொடங்கி பாதி வரை கொண்டு வந்தது. நிறுத்தி விட்டு ‘U’ என்றது குழந்தை. குழந்தையின் படைப்பாற்றலை எண்ணி உண்மையில் பேருவுவகை அடைந்தேன். இதைப் பார்த்து சந்தோஷம் அடைவது கூட ஆபத்தோ என்று பயந்தேன். பெற்றோர், குழந்தையின் சேர்க்கைக்கு எந்தக் குந்தகமும் வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு நின்றனர்.

ஆசிரியர் மட்டும் அசராமல் மீண்டும் ஒருமுறை அந்தக் குழந்தையின் படைப்பாற்றலை அழித்தார். மீண்டும் சாக்பீஸை கையில் கொடுத்தார். “வட்டம் போடு” என்றார். இம்முறை குழந்தை மேலிருந்து தொடங்கி இடப்புறமாக சாக்பீஸை இழுத்துக் கொண்டு வந்தது. கீழே வந்ததும் நிறுத்திவிட்டு ‘C’ என்றது குழந்தை. என் உள்ளத்தில் கரைபுரண்ட உற்சாகத்திற்கு அளவில்லை. கை கட்டி ஆரவாரம் செய்ய வேண்டும் போல் இருந்தது. ஆனால், அதைக் காட்டிக் கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர் ஓர் வட்டம் வரையச் சொன்னார். ஆனால் குழந்தை மூன்று விதத்தில் தன் படைப்பாற்றலை வெளிக்காட்டி விட்டது. இறுதியாக வட்டத்தைப் போல ஒன்றை வரைய குழந்தை முயற்சி செய்து தோற்றுப் போனது. அங்கிருந்த யாரும் அதனை ரசிக்க இயலவில்லை. பெற்றோர் குழந்தையின் படைப்பூக்கம் கண்டு மகிழ்ந்து போய் இருக்கலாம். ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இறுதி வரை ஆசிரியர் கூறிய வட்டத்தை மாத்திரம் குழந்தை போடவே முடியவில்லை.

“அட்மிஷன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உங்கள் குழந்தை படைப்பூக்கம் மிக்க குழந்தை. இந்தப் படைப்பாற்றல் போற்றிப் பாதுகாக்கப்பட்ட வேண்டியது” என்று நண்பரிடம் கூறினேன். நான் கூறியதை நண்பர் ரசித்தபோதும் ஆர்வமாய் கேட்டபோதும் மனைவிக்குத் தெரியாமல் மகிழ்ச்சி அடைந்தார். அவரது மனைவி அந்தப் பள்ளியில் தன் குழந்தைக்கு அட்மிஷன் என்பதில் மட்டுமே நிலைகொண்டிருந்தார்.

நேர்முகத் தேர்வு முடிந்தது. “இப்போதேனும் இங்குள்ள விளையாட்டுச் சாதனங்களில் சற்று நேரம் குழந்தைகள் விளையாட அனுமதியுங்கள்” என்று பொத்தாம் பொதுவாகக் கூறினேன். பல குழந்தைகள் ஓடிச் சென்று விளையாடியது. சருக்கு, ஊஞ்சல் என்று ஏதோ ஒன்றையோ அல்லது மாற்றி மாற்றியோ விளையாடி மகிழ்ந்தது. சில பெற்றோர்கள் “அட்மிஷன் கிடைக்கிறதோ, இல்லையோ இதிலேயாவது விளையாடி விட்டு வரட்டும்” என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

மூன்றரை வயதுக் குழந்தை என்ன நடித்திருக்கும்? ஏனிந்த நுழைவுத் தேர்வு? எதுவும் தெரியாத குழந்தையிடம் நமக்குத் தெரிந்ததைப் பரிசோதனை செய்து பார்த்தல் பாவம் இல்லையா? உலகம் தெரியாத பிஞ்சுக் குழந்தையிடம் ‌அதனை இழுத்து வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்பது அக்குழந்தையை அவமதித்தல் ஆகாதா? சொந்தக் குழந்தையைப் பலர் முன்னிலையில் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அசிங்கப்படுத்தி என்ன சாதிக்கப் போகிறோம்? தார்மிக நெறிகள் நமக்கு மறத்துப்போனாலும் கல்வி உரிமைச் சட்டம் ஏன் தன் கடமையைச் செய்ய மறுக்கிறது?

எத்தனை தேர்வுகள் மூன்று வயது முதல் எழுதி தேர்வு பெற்றாலும் நீட் தேர்விலோ, இன்னபிற நுழைவுத் தேர்வுகளிலோ வெற்றி பெறவில்லை எனில் உயர் கல்வி எட்டாக் கனியாகி விடுமே! என்றுதான் இவை பற்றிக் கவலைப்பட்டு காத்திரமான பணிகளை மேற்கொள்ளப் போகிறோம்.

கட்டுரையாளர்

ஈரோடு - கலை அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறைத் தலைவர். பள்ளிக்கூடத் தேர்தல் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon