மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

விஜயகாந்துக்கு எதிராக அதிமுக அமைச்சர்!

விஜயகாந்துக்கு எதிராக அதிமுக அமைச்சர்!

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக விஜயகாந்தை விமர்சித்து அமைச்சர் பாஸ்கரன் பேசியது அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதேபோல நடிகர் ரஜினிகாந்தும் கட்சி ஆரம்பித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ரஜினி என்ன அரசியல் தலைவரா என்று கேள்வி எழுப்பிய முதல்வர், மறுநாள் அளித்த பேட்டியில் கமலையும் விமர்சித்தார். “வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதுபோலவே அமைச்சர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கையில் நேற்று (நவம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்த கதர் மற்றும் கிராமத் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன், “உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சிவகங்கையில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கான பணிகள் நிறைவுபெறும். சிவகங்கையை இரண்டாகப் பிரித்து காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

அவரிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், அது என்ன ஆனது பார்த்தீர்களா? இனி நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அது செல்லுபடி ஆகாது” என்று பதிலளித்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது. வரும் உள்ளாட்சித் தேர்தலையும் அதிமுகவுடன் இணைந்து சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளது. அதுபோலவே திமுக கூட்டணியை எதிர்த்து பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு எதிரான அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பாஸ்கரன் ஏற்கனவே நேற்று முன்தினம் காரைக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில், “செல்போன் நல்ல நோக்கத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றைப் பல இளைஞர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும் போல் உள்ளது” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon