மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கும் மனப்பதற்றம்!

இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கும் மனப்பதற்றம்!

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனப்பதற்றத்தால் இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளாவதாகத் தெரியவந்துள்ளது.

Journal Drug and Alcohol Dependence இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையின் மூலம், 18 வயதில் மனப்பதற்றத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து மதுவுக்கு அடிமையாவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது 21 வயதில் இவர்கள் மதுவுக்குத் தங்களை வாடிக்கையாக்கிக் கொள்வதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதுமட்டுமின்றி சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களும் இளைஞர்களிடம் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பழக்கத்துக்கும், மனப்பதற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்வதாகச் சொல்லப்படுகிறது.

2,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து கேள்வித்தாள் மற்றும் மருத்துவ நேர்காணல் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் தலைவர் மேடி டையர், “சிறு வயது முதலே இளைஞர்களின் மனப்பதற்றத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்தாலே எதிர்காலத்தில் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கலாம். மது அருந்துவதற்குப் பதிலாகப் பதற்றத்தைச் சமாளிப்பதற்கான நேர்மறையான உத்திகளை உருவாக்க வேண்டும். அப்படியானால், தீங்கு விளைவிக்கும் குடிப்பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதுபோன்ற மனப்பதற்றங்கள் உறவுகளில் உள்ள சிக்கல்களால்தான் வரும் என்று தீர்மானிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Senior Policy and Research Manager at Alcohol Change UK, மார்க் லேஷன் கூறுகையில், “மனநல பிரச்சினைகள், கவலைகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுக்கான தொடர்புகள் பொதுவானவை மற்றும் சிக்கலானவை என்பதை எங்கள் சொந்த ஆராய்ச்சி காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, இந்த புதிய ஆய்வு குறிப்பிடுவதைப் போல, குடிப்பதை நிறுத்துவதன் விளைவாகவும், அதிகமாகக் குடிக்கத் தொடங்குவதற்கான ஆபத்து காரணியாகவும் மனப்பதற்றம் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே, மனப்பதற்றத்தைச் சரி செய்தாலே மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon