மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மன்னிப்புக் கேட்க மாட்டேன்: மாஃபா பாண்டியராஜன்

மன்னிப்புக் கேட்க மாட்டேன்: மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் பல இடங்களில் அவரது உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், போராட்டத்தைக் கைவிடக் கோரிய ஸ்டாலின், சிறை சென்றதற்கான ஆவணங்களைப் படிக்க மனமில்லாமல் விமர்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றாரா, இல்லையா என்பதற்கான ஆவணங்களை வெளியிடுவேன் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இருப்பது உள்ளிட்ட, மிசாவில் சிறை சென்றதற்கான ஆவணங்களை திமுகவினர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜன், “ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon