மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

4 புதிய மாவட்டங்களின் பகுதிகள் இவைதான்!

4 புதிய மாவட்டங்களின் பகுதிகள் இவைதான்!

தமிழகத்தில் புதிதாக 4 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல திருநெல்வேலியிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகவும், வேலூரிலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை தனி மாவட்டங்களாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ளது. அதில் 4 மாவட்டங்களுக்கான வருவாய் கோட்டங்கள், வட்டங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய 5 வட்டங்களும் உள்ளன. செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. அதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் என 8 வட்டங்கள் செயல்படும்.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வேலூர், குடியாத்தம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் என ஆறு வட்டங்களும் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி என இரண்டு வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 வட்டங்களும் செயல்படும். ராணிப்பேட்டையில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, நெம்மேலி, அரக்கோணம் ஆகிய 4 வருவாய் வட்டங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையன்விளை ஆகிய எட்டு வட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுகாக்களும் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் என்று தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோயிலை பிரிக்கக் கூடாது என வைகோ விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் இணைக்கப்பட்டுள்ளது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon