மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா: கூட்டணி அமைவதில் இழுபறி!

காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா: கூட்டணி அமைவதில் இழுபறி!

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பும் சிவசேனா தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க என்சிபி, காங்கிரஸ் இடையே முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த போதும், அந்த கட்சியாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை.

இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நேற்று(நவம்பர் 12) மாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

நீடிக்கும் இழுபறி

சிவசேனாவுக்கு இடையிலான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் இன்னும் உள்ளன என்று என்சிபியும் காங்கிரசும் நேற்று(நவம்பர் 12) இரவு மகாராஷ்டிரா ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறின. சிவசேனாவுடன் பேசுவதற்கு முன்பு காங்கிரசும் என்சிபியும் முதலில் தங்கள் விவாதங்களை முடிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்தார். இறுதி முடிவுக்கு காங்கிரஸ், என்சிபி மற்றும் சிவசேனா இடையே ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்குவது அவசியம் என்று என்சிபி தலைவர் சரத் பவார் மேலும் கூறினார்.

தற்போதுள்ள சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக வேண்டும் என சரத் பவார் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனாவை ஒப்பிடும்போது, வெறும் 2 இடங்களைத்தான் தேசியவாத காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது என்பதைக் கணக்கில் கொண்டுதான், முதல்வர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் பங்கு கேட்டுதான், பாஜக-வுடன் மோதலில் ஈடுபட்டு, கூட்டணியையும் முறித்தது சிவசேனா.

அதே சமயம் காங்கிரஸ் தரப்பில், முதல்வராக தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றும் மூன்று கட்சிகளும் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் உடன்பட வேண்டும் என்றும் கோரி உள்ளது. இதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பவார், அஜித் பவார் மற்றும் பிற தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர்கள் மும்பையில் உள்ள ஒய்.பி.சவன் மையத்தில் இன்று காலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கு பின், அஜித் பவார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “காங்கிரஸ் தலைவர்கள் இங்கு இல்லாததால், நேற்று(நவம்பர் 12) காலையில் நிலைமை வேறுபட்டிருந்தது. மூன்று நாட்கள் நீட்டிப்பு கோரி என்.சி.பி ஆளுநருக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தது. அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான முழு நடைமுறைக்கும் அதிக நேரம் எடுக்கும் என நாங்கள் கோரினோம்” என்றார். சிவசேனா குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “முதலில் காங்கிரசுடன் ஒரு உடன்படிக்கை தயாரான பின்பு தான் சிவசேனா பற்றிய விவாதத்திற்கு செல்ல முடியும்” எனக் கூறினார்.

மேலும், “இன்று கூட்டத்தில் எங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூடிய விரைவில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர். புதிய ஆண்டு துவங்குவதற்கு முன்பே, மகாராஷ்டிராவுக்கு ஒரு அரசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) பொதுவான குறைந்தபட்ச திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு மகாராஷ்டிரா தலைவர்களின் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த குழுவில் அசோக் சவான், பிருத்விராஜ் சவான், மணிகிராவ் தக்ரே, பாலாசாகேப் தோரத் மற்றும் விஜய் வதேட்டிவார் ஆகியோர் அடங்குவர்.

இதனிடையில், சிவசேனாவின் வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ், “சிவசேனா சார்பாக நாங்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்யவில்லை. எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார். ஆளுநர் கால அவகாசம் வழங்காதது தொடர்பாக நேற்றைய(நவம்பர் 12) வழக்கு குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon