மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இளம் இயக்குநர்கள் பக்கம் சாயும் விஜய்

இளம் இயக்குநர்கள் பக்கம் சாயும் விஜய்

விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் நிலையில், ‘விஜய் 65’ படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷங்கர்(நண்பன்), ஏ.ஆர். முருகதாஸ்(துப்பாக்கி, கத்தி, சர்கார்), அட்லீ(தெறி, மெர்சல், பிகில்) போன்ற முன்னணி இயக்குநர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து வந்த விஜய், தற்போது அடுத்த கட்டமாக இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளார். பிகில் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் ஓடி வரும் நிலையில், விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. கைதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

‘விஜய் 64’ என தற்காலிக தலைப்புடன் அழைக்கப்படும் இப்படம், விஜய் இதற்கு முன் நடித்திராத முற்றிலும் புதிய கதைக்களத்துடன் வரவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகன் நாயகியாகவும், மற்ற கதாபாத்திரங்களில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, ரம்யா சுப்ரமணியம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் 65ஆவது படத்தை மகிழ் திருமேணி இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேணி இயக்கத்தில் வெளியான ‘தடம்’ படத்தின் வெற்றி திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத இறுதியில், ‘விஜய் 64’ படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய்யை சந்தித்து கதையை கூறியிருக்கிறார் மகிழ் திருமேணி. பரபரப்பான ஆக்‌ஷன் திரைக்கதையை இந்த இளம் இயக்குநர் கூற, உடனடியாக ‘ஓகே’ சொல்லியிருக்கிறார் விஜய்.

லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேணி ஆகிய இருவருமே புதிய தலைமுறை இயக்குநர்களாக அறியப்படுபவர்கள். இவர்களது படங்கள் இளைஞர்கள் ரசிக்கும் வகையிலும், பரபரப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றிக்கு பெயர் பெற்றவை ஆகும். தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களின் திரைக்கதை ஆக்‌ஷன் கலந்த திரில்லருக்காக பேசப்பட்டவை. புதிய தலைமுறை இயக்குநர்களுடன் விஜய் கைகோர்த்திருப்பது ரசிகர்களாலும், திரையுலகினராலும் ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது.

2020 ஏப்ரல் மாதம் விஜய் 64 வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து, விஜய்யின் 65ஆவது படம் ஜூன் மாதம்(2020) துவங்கவுள்ளதாகவும், 2021 பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இயக்குநர் மகிழ் திருமேணி, உதயநிதி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனிடையில் ஆர்யாவுடன் ‘டெட்டி’, விஜய் சேதுபதிக்கு வில்லனாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon