மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

கொடிக்கம்பம் விழுந்து விபத்து: அவசர வழக்குக்கு அனுமதி!

கொடிக்கம்பம் விழுந்து விபத்து: அவசர வழக்குக்கு அனுமதி!

சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சென்னையைச் சேர்ந்த இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து சாலை ஓரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் உள்ளிட்டவை வைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில், சுபஸ்ரீ உயிரிழந்து ஒரு மாதத்துக்குப் பிறகு தான், அக்டோபர் 23ஆம் தேதி கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரமே இன்னும் நீங்கா வடுவாக இருந்து வரும் நிலையில் கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தால் அனுராதா என்ற பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவினாசி சாலையில் நட்டுவைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம், அவ்வழியே வந்த அனுராதா மீது விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரி டிரைவர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், லாரி டிரைவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி பதிவில், விபத்து நடந்த போது பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

இந்தநிலையில் கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முறையிட்டுள்ளார். கோவை கொடிக்கம்ப வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரியதையடுத்து, உரிய ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு இன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon