மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

நாசா வெளியிட்ட அரிய காட்சி: சூரியனை கடந்து சென்ற புதன்!

நாசா வெளியிட்ட அரிய காட்சி: சூரியனை கடந்து சென்ற புதன்!

புதன் கிரகம், சூரியனை அதன் நேர்க்கோட்டில் கடந்து செல்லும் அரிய காட்சியின் வீடியோவை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது.

புதன் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்து செல்லும் இந்த அரிய காட்சியை ஒரு நூற்றாண்டில் பதின்மூன்று முறைகள் மட்டுமே காண முடியும். நாசா நேற்று (நவம்பர் 12) வெளியிட்ட வீடியோவில் சூரியனைக் கடந்து செல்லும் போது மிகச்சிறிய அளவிலான ஒரு கரும்புள்ளி போன்று புதன் கிரகம் காட்சியளிப்பது தெரிகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகச்சிறியது புதன் கிரகம். இது சூரியனுக்கு மிக அருகில் 0.4 வானியல் அலகு தொலைவில் உள்ளது. புதன் கிரகத்தில் வளிமண்டலம் இல்லாததால் அது சூரியனில் இருந்து வரும் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வது இல்லை. எனவே வெள்ளி தான் சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கிரகமாக உள்ளது.

புகழ்பெற்ற வானியல் ஆராய்ச்சியாளரான கெப்ளர் விண்வெளியில் இப்படி ஒரு அரிய நிகழ்வு நடைபெறும் என்பதை 1627 ஆம் ஆண்டு கணித்துக் கூறினார். அதன்படி முதன்முதலாக 1631 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி புதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் நிகழ்வைக் கண்டறிந்தனர்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி இந்த நிகழ்வு காணப்பட்டது. அடுத்ததாக 2032ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி தான் சூரியனை புதன் கடந்து செல்லும் காட்சியைக் காண இயலும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon