மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

உயிரிழப்பு: எக்ஸ்பிரஸ் அவென்யூ மீது வழக்குப்பதிவு!

உயிரிழப்பு: எக்ஸ்பிரஸ் அவென்யூ  மீது வழக்குப்பதிவு!

மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் சென்னையில் முதன் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தான் உள்ளது. மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்குத் தடை விதித்து, 2013ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் படி மனிதர்களை ஈடுபடுத்துவோருக்குத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டது. எனினும் இந்த சட்டம் முறையாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு இந்தச் சட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் தான் இருந்து வந்தது.

இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவில், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது அருண் குமார் என்பவர் நேற்று உயிரிழந்தார். விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்த தனது தம்பி ரஞ்சித் குமாரை காப்பாற்றச் சென்ற அருண் குமார் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தி இது போன்ற உயிருக்கு ஆபத்தான பணியில் ஈடுபடுத்தக் கூடாது. விதிகளை மீறிய, தனியார் வணிக வளாக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அருண் குமாரின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அருண் குமார், ரஞ்சித் குமார் உட்படக் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்ய அழைத்துச் சென்ற ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் தண்டபாணியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீதும், அந்த வணிக வளாகம் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் முதன் முறையாக வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon