மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

கனிமொழிக்கு எதிரான வழக்கு: தொடர்ந்து நடத்த அனுமதி!

கனிமொழிக்கு எதிரான வழக்கு: தொடர்ந்து நடத்த அனுமதி!

திமுக எம்.பி கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதில் தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 12) அனுமதி வழங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று வேட்பு மனுவில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கனிமொழிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற்றார். இதுகுறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று (நவம்பர் 12) விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கனிமொழிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அப்போது வழக்கைத் திரும்பப் பெற்றதால், தமிழிசை வழக்கு செலவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால்தான் வழக்கு வாபஸ் பெற்றதாகத் தெரிவித்து அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon