மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

தொழிற்துறை உற்பத்தி சரிவு: திசை திருப்புகிறதா மத்திய அரசு?

தொழிற்துறை உற்பத்தி சரிவு: திசை திருப்புகிறதா மத்திய அரசு?

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளதையடுத்து மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்தது என அரசு தரப்பு தகவல்கள் திங்கட்கிழமை (நவம்பர் 11) வெளியாகின.

புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், “தொழிற்துறையைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் உள்ள 23 தொழிற்துறை குழுக்களில் 17 துறைகள், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 12) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “தொழிற்துறை உற்பத்தியின் குறியீடு 2019 செப்டம்பர் மாதத்திற்கான 4.3% சுருக்கத்தைக் காண்பிப்பதால் பொருளாதார மந்தநிலை ஆழமடைகிறது... தொழிற்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன. உற்பத்தி, வளர்ச்சி மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் எங்கே? நமது இந்தியப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு திட்டம் வைத்திருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் பாஜக அரசு பிரச்சினையைத் திசைத் திருப்பி வருகிறது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (நவம்பர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும். உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர் 2014ஆம் ஆண்டு முதல் மிக மிக குறைவாக மைனஸ் 1.2 சதவிகிதமாக இருக்கிறது.

முக்கியத் துறைகளின் வளர்ச்சி நான்கு ஆண்டுகளிலேயே மிகவும் குறைவாக இருப்பது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ஏற்றுமதி கடுமையாகச் சரிந்து விட்டது. மூலதனப் பொருட்களின் வளர்ச்சி மைனஸ் 21 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பயணிகள் வாகன விற்பனை 23.7 சதவிகிதம் குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சி 4.6 சதவிகிதமாக இருந்தது. தொழிற்துறை உற்பத்திக் குறியீடு என்பது இந்தியாவின் பொருளாதார குறியீடாகக் கருதப்படுவதாகும். சுரங்கம், மின்சாரம் மற்ற உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் எட்டு உள்கட்டமைப்புத் துறைகளாகும். தொழிற்துறை வளர்ச்சியைக் கணக்கிடுவதில் இந்தத் துறைகளின் பங்கு 40 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த 52 மாதங்களில் இல்லாத பின்னடைவாக இந்த எட்டு முக்கியத் துறைகளின் உற்பத்தி 5.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் தொழிற்துறை உற்பத்தி கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. இதனால்தான் தொழிற்துறையின் உற்பத்தி 4.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கிடுவதில் உற்பத்தித் துறையின் பங்கு 78 சதவிகிதமாகும்.

செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி எட்டு ஆண்டுகளில் இல்லாத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், மத்திய பாஜக அரசு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில், “காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்பு சட்ட விதி 370இன் மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை நீக்கம் செய்ததில் காட்டிய அக்கறையை, பொருளாதாரத் தேக்க நிலையைச் சரி செய்வதில் ஏன் காட்டவில்லை?” என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon