மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

எடப்பாடிக்கு மக்கள் நீதி மய்யம் பதில்!

எடப்பாடிக்கு மக்கள் நீதி மய்யம் பதில்!

கமல்ஹாசனை விமர்சித்து முதல்வர் பேட்டியளித்த நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் பதிலளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று (நவம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் பற்றி முதலில் கமல் சொன்னார், இப்போது ரஜினி சொல்லியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவரோ, “வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தைப் பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டு, “கமல் மிகப்பெரிய தலைவர்தானே. ஏன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை? நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும்” என்று சரமாரியாக விமர்சித்திருந்தார்.

சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்க்கை பற்றி குறிப்பிட்டதற்கு சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. முதல்வரைக் கடுமையாக விமர்சித்து சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ரஜினி, கமல்: எடப்பாடி வெளுத்து வாங்குவதன் ரகசியம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலளித்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களைக் கண்டு பயப்படுவது நியாயம் தான்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’ என்று ஹாஷ்டேக்கைப் பதிவிட்டு, “நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்குப் பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம். நாளை நமதே! நிச்சயம் நமதே!!” என்றும் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், “உங்கள் அரசியல் அவருக்குத் தெரியாதுதான் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களே. ஆனால், அவர் அரசியல் உங்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது நேர்மை அரசியல்” என்று விமர்சித்துள்ளார். இதுபோலவே மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்களும் முதல்வருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon