மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

மகாராஷ்டிரா: ஏன் ஆளுநர் காங்கிரஸை அழைக்கவில்லை?

மகாராஷ்டிரா: ஏன் ஆளுநர் காங்கிரஸை அழைக்கவில்லை?

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி நேற்று(நவம்பர் 12) அமலுக்கு வந்தது. மாநிலத்தில் அதிக இடங்களைப் பிடித்த பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு (நேற்று இரவு 8.30 வரை கால அவகாசம் இருந்த நிலையில்) முன்பே குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் பெறும் கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் கூட, அரசாங்கம் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

நீதிமன்றத்தை நாடிய சிவசேனா

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க கட்சிக்கு அதிக நேரம் ஒதுக்க மறுத்ததை எதிர்த்து சிவசேனா நேற்று(நவ.12) உச்ச நீதிமன்றத்தை நாடியது. என்.சி.பி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு சாத்தியமான கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயற்சித்த சிவ சேனா, இரு கட்சிகளிடமிருந்தும் தேவையான ஆதரவுக் கடிதங்களைப் பெறத் தவறியதையடுத்து என்சிபி ஆட்சியமைக்க ஆளுநரால் அழைக்கப்பட்டது.

சிவசேனா மூத்த தலைவர் அனில் பராப் இது பற்றி கூறுகையில், "தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்குமாறு நாங்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால், பெரும்பான்மையை நிரூபித்திருப்போம்” எனக் கூறினார். மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யக்கூடும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக சிவசேனா இரண்டாவது மனுவை தாக்கல் செய்யும் என்று சிவசேனா சார்பாக முதல் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

அவசர விசாரணைக்கு சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் இன்று(நவ.13) குறிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் கோரியுள்ளது.

ஆளுநர் முடிவை எதிர்க்கும் காங்கிரஸ்

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்ததற்காக, அரசியலமைப்பு செயல்முறையை கேலி செய்ததாக குற்றம் சாட்டினார் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா. மேலும், "இது நேர்மையற்றது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது" எனத் தெரிவித்தார்.

அத்துடன், “எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பு திட்டத்தின் நான்கு கடுமையான மீறல்கள் தனித்து நிற்கின்றன. மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் தேர்தல் முடிவுக்குப் பின், மிகப்பெரிய கூட்டணியை அதாவது பாஜக-சிவசேனாவை ஒன்றாக அழைத்திருக்க வேண்டும், பின்னர் இரண்டாவது மிகப்பெரிய கூட்டணி, அதாவது காங்கிரஸ்-என்சிபியை அழைத்திருக்க வேண்டும்.

ஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக, நேரத்தை முற்றிலும் தன்னிச்சையாக ஒதுக்கியது ஏன்? ஜனாதிபதியின் ஆட்சிக்கு முன் பாஜகவுக்கு 48 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. சிவசேனாவுக்கு 24 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. என்சிபிக்கு 24 மணிநேரம் கூட ஒதுக்கப்படவில்லை. இது நேர்மையற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது, ”என்று அவர் கூறினார்.

பாஜக கூட்டணி குறித்து முரண்படும் சிவசேனா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று(நவ.12) மாலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், “காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சேனா ஆகியவை வெவ்வேறு சித்தாந்தங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கான வழியை மேற்கொள்வார்கள்” என்றார். ஜனாதிபதியின் ஆட்சியை அமல்படுத்தியது தொடர்பாக, "நாங்கள் 48 மணிநேரம் கேட்டோம், ஜனாதிபதி எங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு காங்கிரஸ்-என்.சி.பி அவர்களின் ஆதரவை நேற்று முறையாக நாங்கள் கோரியுள்ளோம். எங்களுக்கு 48 மணிநேரம் தேவை, ஆனால் ஆளுநர் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை " என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

அதே சமயம், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சியான பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார் சிவசேனா தலைவர். ஒரு நிருபர் உத்தவ் தாக்கரேவிடம், “பாஜகவுடனான கூட்டணி முழுமையாக முடிந்துவிட்டதா”, எனக் கேட்டார். அப்போது உத்தவ் தாக்கரே, “நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? இது அரசியல். ஜனாதிபதி எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளார்” எனக் கூறினார்.

அதே சமயம், சிவசேனாவுடன் அரசாங்கத்தை உருவாக்க பாஜக மறுத்துவிட்டதாக தாக்கரே குற்றம் சாட்டினார். “நான் பாஜக கூட்டணியை முறிக்கவில்லை, அதை முறித்தது பாஜக தான். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், நிலைமை என்னவென்றால், பாஜக 200-220 இடங்களுக்கு மேல் வெல்லாது. நான் தான் இருளில் இருந்த பாஜகவிற்கு துணை நின்றேன். எனவே மீண்டும் பாஜகவுடன் செல்வதற்கான விருப்பம் முடிந்திருக்கலாம். ஆனால், இது முழுக்க அவர்களால் தான் முடிவுக்கு வந்தது, ”என்றார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon