மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்?

பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்?

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சூழலில், அடுத்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் நேற்று (நவம்பர் 12) நேரில் சந்தித்தனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக திமுக சார்பில் 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தனர். கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகத் தேர்தல் ஆணையரும் அவர்களுக்கு உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “உள்ளாட்சித் தேர்தலை இதுவரை நடைபெறாத ஒரு முறையில் நடத்த முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதாவது கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரு தேர்தல், அது முடிந்த பிறகு பேரூராட்சிகளுக்கு ஒரு தேர்தல், அதன் பிறகு நகராட்சி, மாநகராட்சிகளுக்குத் தேர்தல் என நடத்த ஆலோசனை நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை எந்தக் காலகட்டத்திலும் ஏற்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நகராட்சியைச் சுற்றிலும் கிராமங்கள் உள்ளன. கிராமப் பஞ்சாயத்துக்குத் தேர்தல் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பேரூராட்சிக்குத் தேர்தல் நடத்தினால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். தவறுகளும் அதிகமாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதற்கு திமுகவுக்கு ஆட்சேபனையில்லை எனவும், திமுக, அதிமுக என இரண்டு ஆட்சிக் காலங்களிலும் அது நடந்திருப்பதாகவும் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, “புதிய தேர்தல் முறையில் ஒரு மாவட்டம் என்றால் கிராமப் பஞ்சாயத்திலிருந்து மாநகராட்சி வரை ஒரே நாளில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” எனவும் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவரே இருப்பதால் ஒரே நேரத்தில் நிர்வாகத்தையும், தேர்தல் பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும் என்ற நிலை உள்ளதால், ஒவ்வொரு கோட்டாட்சிக்கும் தேர்தல் பணிகளைக் கவனிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

மேலும், “கிராமங்களில் வார்டு உறுப்பினர், கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு ஓட்டுக்கள் போட வேண்டும். தற்போது, இந்த நான்கு ஓட்டுக்களையும் ஒரே பெட்டியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். அப்படி செய்யும்போது வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு விழுந்த ஓட்டுக்களை அங்கேயே எண்ணி முடித்துவிடுவர். அதன் பிறகு பெட்டியை உடைத்து ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுக்களை எடுத்துச் சென்றுவிடுவர். இங்குதான் ஓட்டுக்களை மாற்றுவது என அனைத்து தவறுகளும் நடக்கிறது. ஆகவே நான்கு வாக்குகளுக்கும் தனித்தனி பெட்டிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon