மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

கெளதம் மேனன் வாய்ஸ்ஓவரில் மீண்டுமொரு போலீஸ் கதை!

கெளதம் மேனன் வாய்ஸ்ஓவரில் மீண்டுமொரு போலீஸ் கதை!

கெளதம் மேனன் வாய்ஸ்ஓவரில் வெங்கட் பிரபு, வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாக்கப்’ படத்தின் டீசர் நேற்று (நவம்பர் 12) மாலை வெளியாகியது.

முழுக்க முழுக்க காவல் துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கிறது ‘லாக்கப்’ டீசர். காவல் துறை தொடர்பான கதையென்பதால், கெளதம் மேனன் வாய்ஸ்ஓவரில் இந்தப் படத்தின் டீசர் இருப்பது சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. நகரத்தைப் பறவைக்கோணத்தில் காட்டியபடி தொடங்கும் டீசர், கெளதம் மேனன் குரலில், “இந்த உலகத்துல மனுஷங்க நாம செய்யற ஒவ்வொரு தப்புக்குப் பின்னாலயும் கடவுளோட பார்வை ஒண்ணு இருக்கு” எனப் பரபரப்பான அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் நகர்கிறது. 1.04 நிமிடங்கள் வரும் இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியிருக்கிறது.

சென்ற வருடம் வெளியான ராட்சசன் படத்துக்குப்பின், காவல் துறையை மையப்படுத்தி எடுக்கப்படும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் மேல் ரசிகர்களுக்கு ஈர்ப்பு அதிகமாகியது. லாக்கப் படமும் அந்த வரிசையில் ரசிகர்களை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் டீசரை ஜெயம் ரவி நேற்று (நவம்பர் 12) மாலை வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடிகர் நிதின் சத்யா இந்தப் படத்தைத் தயாரிக்க, நாயகனாக வைபவ், வில்லனாக வெங்கட் பிரபு, நாயகியாக வாணி போஜன் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை: அரோல் குரோலி.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon