மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: முதியோர் வாக்கு...முதல்வர் வியூகம்!

டிஜிட்டல்  திண்ணை: முதியோர் வாக்கு...முதல்வர் வியூகம்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

”தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அவர்கள் மூலம் வாக்குகளை அள்ள வேண்டும் என்ற திட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இளைஞரணி, மாணவர் அணிகளில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

திமுகவில் கூட இளைஞர்கள் சக்தியை தன் பக்கம் திருப்புவதற்கு உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் ஆக்கி பல்வேறு முயற்சிகளையும் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேறொரு வகை வியூகத்தை வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக வகுத்து வருகிறார்.

அதுதான் முதியோர்களின் வாக்கு. தமிழகத்தில் 58 வயதை கடந்தவர்கள் அதிகாரபூர்வமாக முதியோர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தவகையில் கிராமப்புறங்களில் எந்த வேலை வாய்ப்பும் இன்றி இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கிறது. அவர்களில் யார்யாருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதையும் கணக்கெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவசரமாக அறிவுறுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.

அண்மை மாதங்களாக முதலமைச்சர் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்களை நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மனுக்களை நேரடியாக பெற்றார். அந்த மனுக்களை ஆய்வு செய்தபோது அதில் பல மனுக்கள் ஓஏபி எனப்படும் முதியோர் பென்ஷன் தேவை என்பதாகவே இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு முன்னதாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாரிகளின் கறாரான நிபந்தனைகளால் ஓஏபி வாங்குவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது என அதிமுக பிரமுகர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு பிரச்சாரங்களில் ஓஏபி பிரச்சினையைக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கையில் எடுத்த முதல்வர் அதிகாரிகளை அழைத்தார். ‘முதியவர்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக அரசாங்க அலுவலகத்தை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. அதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்கு ஓய்வு உதவித் தொகை பெறுவதற்கு தகுதியான முதியவர்களை கணக்கெடுங்கள். இவர்களில் தகுதி இருந்து யாரும் இந்தத் திட்டத்திலிருந்து நழுவிப் போய் விடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.

இதைத்தான் கடந்த வாரம் சேலத்தில் நடந்த அரசு விழாவில் தலைமைச் செயலாளர் சண்முகம் பேசும்போது முதியவர்களின் ஓய்வூதியத்திற்கு வீடு வீடாக சென்று கணக்கெடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இவரைப் போன்று மக்களை தேடிச் செல்லும் முதல்வர் வேறு யாருமில்லை என்று குறிப்பிட்டுக் காட்டினார். ஓஏபி பெறுவதற்கு தகுதியான முதியவர்களின் எண்ணிக்கையை நவம்பர் மாதத்திற்குள் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் இதன் மூலம் தமிழ்நாட்டில் பல லட்சம் முதியவர்களை ஓஏபி திட்டத்துக்குள் கொண்டுவந்து அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச நிரந்தர நிதியாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்.

இது மட்டுமல்ல தற்போது 55 வயதைக் கடந்த பலரும் எம்.ஜி,ஆர், ஜெயலலிதா மீது ஒருவித மரியாதை வைத்திருப்பவர்கள் இரட்டை நிலையை மறக்காதவர்கள். அந்த வகையில் அவர்களின் வாக்குகளை அப்படியே அதிமுகவுக்கு தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதும் முதல்வரின் இந்த திட்டத்தில் இருக்கின்ற மிகப் பெரிய வியூகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இளைஞர்களை நோக்கி பல்வேறு அரசியல் வாதிகள் படையெடுத்து வரும் நிலையில் சத்தமில்லாமல் முதியவர்களின் வாக்குகளை அள்ளுவதற்கு இப்படி ஒரு வியூகத்தை வகுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைனில் போனது வாட்ஸ்அப்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon