மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

அரசியலமைப்புக்கு எதிராக சபாநாயகர்கள்!

அரசியலமைப்புக்கு எதிராக சபாநாயகர்கள்!

அரசியலமைப்புச் சட்டக் கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படுவது அதிகரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூலை மாதம் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர்கள் அனைவரையும் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். மேலும், நடப்பு சட்டப்பேரவை காலம் முடியும் 2023 வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இதனை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று (நவம்பர் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பி.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா மாதுரி அமர்வு அளித்த தீர்ப்பில், ‘17 பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும்’ எனவும், ‘அதே நேரத்தில் வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அவர்கள் போட்டியிடலாம். வெற்றிபெறும் பட்சத்தில் பொறுப்புகளையும் வகிக்கலாம். இது சபாநாயகர் அதிகாரத்தின் கீழ் வராது’ என்றும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, சபாநாயகர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “சபாநாயகர்கள் நடுநிலையானவர்கள். அவையை நடத்தும்போதும், மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்போதும் நடுநிலையாகவும் சுயமாகவும் சபாநாயகர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள கடமையை சபாநாயகர் கடுமையாக பின்பற்ற வேண்டும். தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் தலையீடு இல்லாமல் மனுக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,

“சபாநாயகர் தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியிலிருந்து விடுவித்துக்கொண்டு செயல்பட முடியாவிட்டால், அவருடைய செயல்பாடுகள் நடுநிலைத்தன்மை மற்றும் சுதந்திரத்திற்கு விரோதமாக முடிந்துவிடும். நடுநிலையோடு செயல்படாவிட்டால் பொதுமக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற முடியாமல் போய்விடும்” என்று குறிப்பிட்டனர்.

மேலும், “எந்த வழக்கை எடுத்துக்கொண்டாலும், நடுநிலை வகிக்கும் அரசியலமைப்புக் கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. கூடுதலாக அரசியல் கட்சிகள் குதிரை பேரம் மற்றும் ஊழல்களில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக குடிமக்களுக்கு நிலையான அரசாங்கங்கள் மறுக்கப்படுகிறது. இந்த சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையை வலிமைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதன், 13 நவ 2019

அடுத்ததுchevronRight icon