xசேவையை நிறுத்துகிறதா வோடபோன்? சிஇஓ விளக்கம்!

public

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, மொபைல் ஸ்பெக்ட்ரம் கோரிக்கையை அரசாங்கம் தளர்த்தாவிட்டால் நிறுவனம் சரிவின் விளிம்பிற்குச் செல்லும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. மேலும் இந்தியாவில் மொபைல் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்கள், அதிக வரி விதிப்பு, உரிமம் பெறுவதற்கான கட்டணம் உள்ளிட்டவைகள் மிகவும் அதிகமாக உள்ளது என அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் குற்றம் சாட்டி வந்தன.

அதேசமயத்தில், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டண தொகை அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே ஐயுசி எனப்படும் இணையதள சேவைக் கட்டணத்தால் திணறி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சுமார் 38 கோடி பயனாளர்கள் வோடாபோன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனத்திற்கு கடந்த காலாண்டில் மட்டும் ரூ.5000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. கடன் சுமை காரணமாக இந்தியாவில் வோடபோன் நிறுவனம், சென்ற ஆண்டிலிருந்து ஐடியாவுடன் இணைந்து சேவையை தொடர்ந்து வருகின்றது. ஏர்செல் சேவை நிறுவத்தப்பட்டது போல், அடுத்ததாக பிரிட்டனைச் சேர்ந்த வோடாபோன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது என்று ஒரு வதந்தி பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வோடாபோன் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி நிக் ரீடு, லண்டனில் நேற்று(நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மொபைல் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்கு இந்திய அரசாங்கம் நிவாரணம் வழங்காவிட்டால் இந்தியாவில் வோடாபோன் சேவைகள் கலைக்கப்படுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

அத்துடன், “நிதி ரீதியாக, ஆதரவற்ற கட்டுப்பாடு, அதிகப்படியான வரி ஆகியவற்றின் மூலம் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. அதற்கு மேல் உச்சநீதிமன்றத்தின் எதிர்மறையான தீர்ப்பையும் பெற்றோம்,” என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது கடந்த கால நிலுவைத் தொகையில் ரூ.92,000 கோடிக்கு மேல் செலுத்துமாறு தொலை தொடர்பு ஆபரேட்டர்களை கேட்டுள்ளது. இதில், வோடபோன் – ஐடியா இப்போது கூடுதல் உரிமக் கட்டணமாக ரூ .28,000 கோடியை செலுத்த வேண்டும், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் நிலுவைகளில் ரூ .11,000 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும்.

நேற்று(நவம்பர் 12) வெளியிடப்பட்ட வோடபோனின் நிதி முடிவுகள் சார்ந்த அறிக்கையில், இந்தியாவிலிருந்து தான் அதிகப்படியான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளது.

வோடபோன் தலைமை அதிகாரி மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் முதலீடு வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு காரணம் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்க உரிமம் பெறுவதற்கு கூடுதல் கட்டணம், அதிக வரி, நெருக்கடியான விதிமுறைகள் என கூறினார். அதேபோல் அரசு, மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுவதாக பரவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டபோது, அதனை வதந்தி என்றும் தொடர்ந்து இந்தியாவில் வோடபோன் முதலீடு செய்யும் எனவும் அதற்கான சந்தை இந்தியாவில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஜியோ 2016ஆம் ஆண்டில் சந்தையில் நுழைந்ததிலிருந்து, மற்ற நிறுவனங்கள் அடிவாங்கத் துவங்கின. அரசாங்கம் இப்போது தொழில்துறையில் உள்ள மன அழுத்தத்தைத் தணிக்க முயற்சித்து வருகின்றது. ஏ.ஜி.ஆர் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரைக்க செயலாளர்கள் குழுவை அமைத்துள்ளது. அதே சமயம், [தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் வழங்கக்கூடாது](https://www.minnambalam.com/k/2019/11/04/22/Reliance-Jio-advises-Airtel-Vodafone-how-to-raise-money) என ஜியோ கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *