மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

அயோத்தி தீர்ப்புக்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ்

அயோத்தி தீர்ப்புக்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ்

அயோத்தி தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு தரப்படுகிறது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டலாம் என்றும் தெரிவித்தது. மசூதி கட்டுவதற்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை சன்னி வஃக்ப் வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் கட்சி, ராமர் கோயில் கட்டும் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. தீர்ப்புக்கு எதிராக நாங்கள் இருந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளைவித்துவிடும். அயோத்தி விவகாரத்தில் மேற்கொண்டு பிரச்சினை வேண்டாம் என்பதற்காகத்தான் பல சிறுபான்மை அமைப்புகளே தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. பெரிய எண்ணத்தில் நல்ல நோக்கத்திற்காக திறந்த மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அது” என்று விளக்கம் அளித்தார்.

அத்துடன், “இந்த விவகாரத்தில் காங்கிரஸின் முடிவை இந்தியா மட்டுமல்லாமல் உலக சமூகமும் ஆதரிக்கிறது. காங்கிரஸ் தீர்ப்பை எதிர்த்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும். நாங்கள் அந்த நிலையை விரும்பவில்லை. எங்களது நிலைப்பாட்டை சிறுபான்மை அமைப்புகளும், மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவிடம் பேசியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “நானும், திமுக தலைவர் ஸ்டாலினும் பிசிராந்தையரும் கோப்பெரும் சோழனும் போன்றவர்கள். இருவரும் பார்க்காமலேயே பேசிக்கொள்வோம். வரும் 17ஆம் தேதி கட்சியினருடனான கூட்டத்திற்குப் பிறகு பேசுவோம்” என்று பதிலளித்தார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon