மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ஸ்பெஷல்: கெட்டப் பசங்க சார் இந்த நெட்டிசன்ஸ்!

ஸ்பெஷல்: கெட்டப் பசங்க சார் இந்த நெட்டிசன்ஸ்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பேச்சு வழக்குண்டு. ஆனால், ஒரு திருமணம் ட்விட்டரிலேயே நிச்சயிக்கப்பட்டு நீங்கள் பார்த்ததுண்டா? பார்த்ததில்லை என்றால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது KFCCOUPLE திருமணத்தின் கதை தான்.

அந்த காலத்து ராஜா கதைகளில், ஊர் உலகத்திலிருந்தெல்லாம் பொருட்களைக் கொண்டு வந்து திருமண பரிசாகக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும். அதுபோலவே, உலகத்திலுள்ள பெரும் நிறுவனங்களெல்லாம் தங்களது பொருட்களை KFCCOUPLE-ன் திருமணத்துக்கு கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கியது தென் ஆப்பிரிக்காவிலுள்ள KFC ரெஸ்டாரண்டில் தான்.

KFC ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்கும் தன் காதலியின் முன் மோதிரத்தைக் காட்டி, ‘என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா?’ என்று கேட்கிறார் அந்தக் காதலன். எதிர்பாராத இந்தச் சூழலால் வெட்கப்படும் அந்தப் பெண், அந்த வெட்கச் சிரிப்புக்கு இடையே சம்மதம் தெரிவிக்கிறார். இதனை அப்போது ரெஸ்டாரண்டின் உள்ளே இருந்த அனைவரும் கொண்டாடி ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானபோது பலரும் கொண்டாடினர். ஆனால், அந்த வீடியோவில் கமெண்ட் செய்த ஒரு நபர் “ தென் ஆப்பிரிக்க ஆண்கள் KFCஇல் கூட பிரபோஸ் பண்றாங்க. KFCல பிரபோஸ் பண்றவங்க தரமில்லாதவங்க” என்று கூறியிருந்தார். இதுபோன்ற பல கமெண்ட்களையும் பார்த்த தென் ஆப்பிரிக்க KFC நிர்வாகம், “அழகான இந்த ஜோடியை எங்களுக்குக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இத்தனை அழகான தருணத்தை KFC ரெஸ்டாரண்டில் உருவாக்கிய இவர்களுக்கு நாங்கள் சிலவற்றை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தது. ஒரு மனிதனின் தரம் என்பது அவர் வாழும் சூழலோ, அவரது பொருளாதார நிலையோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் இடம் என எதைப் பொருத்தும் அமைவதில்லை என்பதை உணரவைக்க KFC எடுத்த இந்த முயற்சிக்கு, தென் ஆப்பிரிக்க நாடு முழுவதுமே அசைந்தது.

KFCயின் இந்த அறிவிப்பை பலரும் ஷேர் செய்யத் தொடங்கினார்கள். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டீமின் ட்விட்டர் அக்கவுண்டில் கூட இந்தத் தகவல் பகிரப்பட்டு அந்த ஜோடியைத் தேடினார்கள். கடைசியில் திருமணத்திற்கான திட்டங்கள் வகுத்துக் கொடுக்கும் ஒருவர் இவர்களைக் கண்டுபிடித்து KFC நிர்வாகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது ‘இவர்கள் திருமணத்துக்குத் தயாராக இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான பட்ஜெட் இல்லை’ என்று அறிவித்தார். இதைக்கண்ட KFC ‘அந்த ஜோடியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். ஹெக்டர் மற்றும் நொன்லான்லா ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்திவைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என பதிவு செய்தது. KFC-யின் இந்த அற்புதமான முயற்சியை பாராட்டுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள கிளம்பினர் சிலர். சிலரல்ல, தென் ஆப்பிரிக்க நாடே கிளம்பியிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும், உல்ஸ்வொர்த் நிறுவனம் ‘இரண்டரை லட்சம்’ மதிப்புள்ள வௌச்சரை இந்த ஜோடிக்கு வழங்குவதாக அறிவித்தது.

கோக் நிறுவனம் திருமணத்திற்குத் தேவையான குளிர்பானங்கள் அனைத்தையும் இலவசமாகத் தருவதாக அறிவித்தது.

தென் ஆப்பிரிக்காவின் சிம் கார்டு விற்கும் ரெயின் நிறுவனம், ‘இந்த ஜோடிக்கு இரண்டு இலவச சிம் கார்டுகளையும், அவற்றில் ஒரு வருடத்துக்கு இலவச அன்லிமிடெட் இண்டர்நெட் திட்டத்தையும் கொடுக்கிறோம்’ என அறிவித்தது.

தென் ஆப்பிரிக்காவில் வைர மோதிரம் விற்கும் நிறுவனமான எமெரெல்டு “இரண்டு லட்சம் மதிப்புள்ள ரோஸ் கோல்டில் வைரம் பதித்த இரண்டு மோதிரங்களைக் கொடுக்கிறோம்” என உறுதி கொடுத்தது.

பெரிய பெரிய நிறுவனங்கள் இப்படி உள்ளே இறங்கினாலும், தனியாக இயங்கும் கலைஞர்கள் தயங்காமல் உள்ளே வந்தனர். டாம் ரிகோட்ஸோ என்ற உடை வடிவமைப்பாளர் “இந்தத் திருமணத்துக்கான டிரெடிஷனல் உடைகளை நான் வடிவமைத்துக் கொடுக்கிறேன்” எனக் கூறியதும், “நீங்கள் வடிவமைக்கும் உடைக்குத் தேவையான பொருட்களை நான் வாங்கித் தருகிறேன்" என்று வந்து நின்றார் ரமி சுவேன். பல் மருத்துவரான தெம்பெக்கா புலேனி “உங்கள் சிரிப்புக்கு மேலும் அழகு சேர்க்க, உங்கள் பற்களை வெண்மைப்படுத்தும் பொறுப்பு என்னுடையது” என்று கூறினார். இப்படியே இசை நிகழ்ச்சி, டி.ஜே செட், வரவேற்புக்கான ஆட்கள் என ஒவ்வொன்றிற்கும் தானாகவே ஏற்பாடுகள் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாடகி அமி ஃபகு, “உங்கள் திருமணத்தில் பாடும் வாய்ப்பை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டது இந்தத் திருமண ஏற்பாட்டாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது.

திருமணத்துக்கு எல்லோரும் உதவிக்கொண்டிருக்க, அவர்களுக்கான ஹனி மூன் பேக்கேஜுடன் வந்து நின்றது தென் ஆப்பிரிக்காவின் விமான சேவை நிறுவனமான குலுலா. “தென் ஆப்பிரிக்காவின் தலைநகரமான கேப் டவுனுக்கு வந்து ஐந்து நாட்கள் தங்குவதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என அறிவித்தது. இதைப் பார்த்த தென் ஆப்பிரிக்காவின் ஆடி(AUDI) கார் நிறுவனம், இந்த ஹனிமூன் பேக்கேஜின் இடங்கள் தூரமாக இருக்கிறதே. அங்கே செல்வதற்கு நாங்கள் கார் கொடுக்கிறோம். மகிழ்ச்சியாக இருங்கள்” என்று குறிப்பிட்டது.

KFC ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு பிரபோஸலின் காரணமாக, இப்போது தென் ஆப்பிரிக்காவே கூடி நின்று ஒரு திருமணத்தை நடத்தப் போகிறது. இதனை தொலைக்காட்சியிலும், இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்ய பல நிறுவனங்கள் உறுதியளித்திருக்கின்றன.

உடை, மேக்-அப், மது, உணவு, இடம், நாற்காலிகள், உணவுக்குத் தேவையான ஆடுகள், காலணிகள், கோட் சூட், சிகை அலங்காரம், ஃபோட்டோ-வீடியோ, சவுண்ட் டிவைசஸ், அழைப்பிதழ் டிசைன், திருமணத்தின் பேக்கிரவுண்ட் டிசைன் என திருமணத்துக்குத் தேவையானவை, ஹனி மூனுக்குத் தேவையானவை, திருமணத்துக்குப் பிறகான ஒரு வருட வாழ்வுக்குத் தேவையானவை என அனைத்தையும் கொடுத்து இந்தத் திருமணத்தை ஒரு நாடே நடத்தப் போகிறது.

அன்பு என்றுமே அநாதை கிடையாது.

-சிவா

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon