மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

புதிய மாவட்டங்கள்: எதிர்ப்பும், ஆதரவும்!

புதிய மாவட்டங்கள்: எதிர்ப்பும், ஆதரவும்!

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூரிலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (நவம்பர் 13) வெளியிட்டது. அதில், புதிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள வருவாய் கோட்டங்கள், வட்டங்கள் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்தபோதே, அதில் சங்கரன்கோயிலை சேர்க்கக் கூடாது, திருநெல்வேலியிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் அல்லது புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான காரணங்கள் குறித்து முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிக்கை[ விடுத்திருந்தார். எனினும், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் பகுதியும் இடம்பெற்றுள்ளது. இதற்கு சங்கரன்கோயில் தனி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “தனி மாவட்டமாக அமைக்கப்பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நிறைந்த இடம் சங்கரன்கோயில். தென்காசியில் அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. இன்னமும் இடத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சங்கரன்கோயிலில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் தாராளமாக உள்ளது. அது மாவட்டத்தின் மையப்பகுதியாகவும் அமையும். போக்குவரத்து வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து, “வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துள்ளனர். அதுபோல திருநெல்வேலி மாவட்டத்தையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. சங்கரன்கோயில் தனி மாவட்டக் கோரிக்கைதான் நிறைவேறவில்லை. எனினும், சங்கரன் கோயில் பகுதிக்குட்பட்ட 250 கிராமங்கள் திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ளன. அதனையும் தென்காசியுடன் இணைத்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறது” என்றும் குற்றம் சாட்டினர்.

தென்காசியில் சங்கரன் கோயிலை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம், கறுப்புக் கொடி ஏற்றுதல், மக்களை திரட்டி போராடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு: வரவேற்கும் மக்கள்

வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதற்கும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதற்கும் அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து வேலூர் சுமார் 85 கி.மீ தூரம் உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திரும்புவதற்கு ஒரு நாள் முழுவதையுமாக செலவழிக்க வேண்டியிருந்தது. தற்போது, திருப்பத்தூர் மாவட்டமாகியுள்ளதால் தங்களது சிரமம் வெகுவாக குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல பல்லாவரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் நீண்ட தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. தற்போது செங்கல்பட்டு புதிய மாவட்டமாகியுள்ளது அதுவும் எளிதாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள்

புதிய மாவட்டங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்டு நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள இந்நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரமாக அரசாணை வெளியிடப்பட வேண்டும் என்பது குறித்து விசாரித்தோம்.

உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களுக்கான எல்லைகள் வரையறை செய்யப்படாத நிலையில், பழைய மாவட்டத்திற்கு மட்டும் ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெறுமா, புதிய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற குழப்பம் இருந்தது. அதாவது, வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூருக்கு மட்டும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் நடைபெறுமா அல்லது திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் நடைபெறுமா என்ற கேள்வி நீடித்துவந்தது. மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். இந்த குழப்பத்தினை தவிர்க்கும் பொருட்டே தற்போது அவசர அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon