மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறள்!

ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறள்!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை காவி உடையில் சித்தரித்து தமிழ்நாடு பாஜக வெளியிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் கடந்த வாரங்களில் தமிழ்நாட்டு அரசியலை அதிர்வுப்படுத்தியது.

இந்த சூழலில் தமிழக அரசின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வைத்த கோரிக்கையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல்குமார் நேற்று (நவம்பர் 12) ட்விட்டர் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

அதில், "திருக்குறளை ஆவின்பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும். இதை பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "மிக விரைவில் தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வினியோகம் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் படமும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெறுமா என்பதும், அப்படி இடம்பெற்றால் திருவள்ளுவர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் எந்த நிறத்தில் இடம் பெறுவார் என்பதும் இப்போதே எதிர்பார்ப்புக்குரியதாகி உள்ளது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon