மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இனி தலைமை நீதிபதி அலுவலகம் வரவேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 13) வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி வருகிறார். அயோத்தி தீர்ப்பு வெளியானதை அடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா? என்ற முக்கியமான வழக்கில் இன்று(நவம்பர் 13) தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டுமென சமூக ஆர்வலர், எஸ்.சி.அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு, டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் " உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் சட்டத்துக்குள் வர வேண்டும். நீதிமன்ற சுதந்திரம் என்பது நீதிபதிகள் சிறப்புரிமை அல்ல. அது அவர்களுக்குரிய பொறுப்பு" எனத் தெரிவித்திருந்தது.

88 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது. அதன்பின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றச் செயலாளர், நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று(நவம்பர் 13) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு, இந்திய தலைமை நீதிபதி பதவி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்குள் வரும் என முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கலாம், உச்ச நீதிமன்றம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பின் போது நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், தீர்ப்பில், "யாரும் இருளில் இருக்கவோ அல்லது யாரையும் ஒரே மாதிரியாக வைத்திருக்கவோ விரும்பவில்லை. நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது” என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ரகசியத் தன்மையையும் தனியுரிமைக்கான உரிமையையும் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதுடன், ஆர்டிஐ முறையை கருவியாகப் பயன்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது. வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நீதித் துறையை அழிக்க முடியாது’ என்றும் கூறி விசாரணையை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன?

2.01.2005 அன்று நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் "அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள் மக்களுக்கு தேவையான தகவல்களை தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதி செய்வதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது எப்படி உரிமையோ அதுபோல் தகவல் அறிவதும் உரிமையாகும்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon