மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

தீர்ப்பு: மகிழ்ச்சியில் பன்னீர், ஸ்டாலின்?

தீர்ப்பு: மகிழ்ச்சியில் பன்னீர், ஸ்டாலின்?

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூலை மாதம் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர்கள் அனைவரையும் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். மேலும், நடப்பு சட்டப்பேரவை காலம் முடியும் 2023 வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இதனை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 13) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசித்திரமான நிகழ்வுகள் காரணமாகவே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தனர். வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி 17 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் இடைத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான விஸ்வநாத், “நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் மீண்டும் போட்டியிடலாம் என்று கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சில மாதங்களிலேயே விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கிவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளவே இல்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைப் போலவே 2017 பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் அமமுக தரப்பிலிருந்து கடந்த ஆண்டு மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு இந்த வருடத்தில் இரண்டு முறை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கும் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வழக்கின் தீர்ப்பினை திமுக மிகவும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், ’பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு வந்தவுடன் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு சரிதான் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பன்னீர் தரப்பில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon