மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

முதல்வருடன் ஸ்மிருதி இரானி சந்திப்பு!

முதல்வருடன் ஸ்மிருதி இரானி சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய ஜவுளித் துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று (நவம்பர் 12) சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை விஐடி பட்டமளிப்பு விழா அந்நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்ட சான்றிதழ்களை ஸ்மிருதி இரானி வழங்கினார். அப்போது பேசிய அவர், விஐடி கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்து பட்டம் பெற்ற 60 பேரில் 32 போ் மாணவிகள் என்பதைக் காணும்போது பெருமையாக இருக்கிறது. ஆனால், விழாவில் பட்டம் பெற்ற 1,698 பேரில் 370 போ் மட்டுமே மாணவிகள் என்பது, நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். .

பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர்களில் இரு மாணவிகள் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுப் பேசிய மத்திய அமைச்சர், வரும் 2021இல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் இந்தியா 40 சதவிகித வளர்ச்சியைக் காணும் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

விஐடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஸ்மிருதி இரானி தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து முதல்வரிடம் மத்திய அமைச்சர் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. அப்போது முதல்வர் அவரிடம் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துள்ளார்.

அமேதியில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற பிறகு முதன்முறையாக ஸ்மிருதி இரானி சென்னை வந்துள்ளார்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது