மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

அயோத்தி வழக்கும், பாபர் மசூதி இடிப்பு வழக்கும்: தி.க தீர்மானம்!

அயோத்தி வழக்கும், பாபர் மசூதி இடிப்பு வழக்கும்: தி.க தீர்மானம்!

அயோத்தி வழக்கின் தீர்ப்பைப் போல, பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் விரிவாக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனத் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

திராவிடர் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது. அதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முடிவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோலவே புதிய தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தக் கூடாது எனவும், நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்தவும், திருவள்ளுவர் மற்றும் தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது நடவடிக்கை வேண்டும் என்றும்,“பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதி, மத மாச்சரியங்களைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு துணை போகக் கூடாது. சங் பரிவார்கள், கல்விக் கூடங்களில் தலையிடுவது - நுழைவது கட்டாயம் தடுக்கப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு தொடர்பான தீர்மானத்தில், “450 ஆண்டுக்கால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9.11.2019 அன்று அளித்த தீர்ப்பு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை என்பனவற்றை சோதனைக்கு உட்படுத்திய தீர்ப்பாகவே இச்செயற்குழு கருதுகிறது.

இந்தத் தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே. மதக் கலவரங்கள் வெடித்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது சட்ட விரோதம் என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறியிருப்பதால், 27 ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான விசாரணை நடந்து வருவதால், மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணையை - இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கினை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்தது போலவே, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கையும் விரைவாக நடத்தி, குற்றமிழைத்தவர்கள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட ஆவனச் செய்ய வேண்டும்” என்று மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, திருச்சியில் 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் மதவெறி - சாதி வெறி முறியடிப்பு மனித நேய மாநாட்டை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon