மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

ரஜினி, கமல்: எடப்பாடி வெளுத்து வாங்குவதன் ரகசியம்!

ரஜினி, கமல்: எடப்பாடி வெளுத்து வாங்குவதன் ரகசியம்!

சில நாட்களாகவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் ஆகியோரை மிகச் சரளமாக விமர்சனம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர்களின் மீதான அவரது முந்தைய அணுகுமுறைக்கும், தற்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், “ தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் பற்றி முதலில் கமல் சொன்னார், இப்போது ரஜினி சொல்லியிருக்கிறாரே?” என்று கேட்டனர்.

நேற்றுதான் ரஜினியை விமர்சனம் செய்ததாலோ என்னவோ இந்தக் கேள்விக்கு பதிலாக இன்று கமல்ஹாசனை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார் எடப்பாடி.

“வெற்றிடம் வெற்றிடம்னு சொன்னாரு. கமல் மிகப்பெரிய தலைவர்தானே... ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதி இடைத்தேர்தல்ல போட்டியிடல.நாடாளுமன்றத் தேர்தல்ல எவ்வளவு ஓட்டு வாங்குனாரு? 65, 66 வயதாகிவிட்டது. திரைப்படத்திலே தகுந்த வாய்ப்பில்லாததால் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டிலே யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களைக் குறை சொல்லி பேசுவதுதான் தவறாகிறது. அவரெல்லாம் இத்தனை நாள் எங்கே போனார்? நானெல்லாம் 1974 இல் இருந்து அதிமுகவில் உழைத்துக் கொண்டிருக்கிறவன். எடுத்த எடுப்பிலேயே பதவிக்கு வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டுகாலம் கட்சியிலே உழைத்திருக்கிறோம். பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி சிறை சென்றிருக்கிறோம். பல்வேறு பணிகளை மக்களுக்கு செய்து மக்களின் ஆதரவின் மூலம் இந்த இடத்தில் இருக்கிறோம்.

அவர் மக்களுக்கு என்ன பணி செய்தார்? சொல்லுங்க பார்க்கலாம்? திரைப்படத்தில் நடித்தார்கள், வருமானம் ஈட்டுகிறார்கள். இன்றுவரைக்கும் படத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மக்களிடம் செல்வாக்கு இருக்கிற மாதிரி காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை விட மிகப்பெரிய நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே தேர்தலை சந்தித்துவிட்டு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது என்பது நன்றாகவே தெரியும். அதே நிலைமைதான் இவர்களுக்கும் ஏற்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்குத் தெரியாது. அரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார். படத்தில் நடித்து மக்களின் பணத்தை சம்பாதித்து, அதன் மூலம் அரசியலில் இப்போது பிரவேசித்துக் கொண்டிருக்கிறார்கள்”என்று கமல்ஹாசனை சரமாரியாக வெளுத்து வாங்கிவிட்டார் எடப்பாடி.

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் இதே நிலைமைதானா என்று நிருபர்கள் கேட்க, ‘அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பதில் தரப்படும் நன்றி வணக்கம்’ என்று புறப்பட்டுப் போய்விட்டார்.

கமலையும், ரஜினியையும் விமர்சிக்கப் போய் சிவாஜியையும் இடித்துரைத்து விட்டார் எடப்பாடி. இதுதொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் தமிழக முதல்வர் கூறியிருப்பார் என்று நினைக்கிறோம்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தபோது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தவர் சிவாஜி. விபத்தினால், துரோகத்தால், இன்று தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் திலகத்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

நேற்று, ரஜினியெல்லாம் ஒரு தலைவரா என்று கேட்டிருந்தார் எடப்பாடி. இன்றோ கமல்ஹாசனை கடுமையாகச் சாடியிருக்கிறார். திடீரென இப்படி நடிகர்களுக்கு எதிராக எடப்பாடி விஸ்வரூபம் எடுப்பது ஏன் என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களோடு அவ்வப்போது மனம் விட்டு தற்போதைய அரசியல் சூழல் பற்றி விவாதிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சில நாட்களுக்கு முன் அப்படி பேசிக் கொண்டிருக்கையில் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது பற்றிய விஷயமும் பேசப்பட்டிருக்கிறது. அப்போது எடப்பாடி, ‘கட்சி ஆரம்பிக்கிறதெல்லாம் சாதாரண விஷயம். ஆனா நடத்துறது எப்பேர்ப்பட்ட கஷ்டம் தெரியுமா? நாம இப்ப கட்சி நடத்துறதுக்கு ஒரு மாசத்துக்கு 25 கோடி ரூபாய் செலவாகுது. தினம் தினம் கட்சி நிகழ்ச்சிகள் நடத்துறது, கட்சிக்காரங்களுக்கான செலவு உட்பட இவ்வளவு செலவாகுதுன்னா... எதிர்க்கட்சியான திமுகவுக்கு இதைவிட குறைவாக ஆனாலும் அதையும் அவங்களாக சமாளிக்க முடியல.

இத்தனை ஆழமா வேரூன்றிய ஆளுங்கட்சியான நமக்கே சிரமமாத்தான் இருக்கு. அப்படின்னா புதுசா கட்சி ஆரம்பிக்கிறவங்களால இதுபோன்ற அடிப்படை செலவையெல்லாம் சமாளிக்கவே முடியாது. அதனாலதான் சொல்றேன் ரஜினி, கமல் எல்லாம் கட்சி ஆரம்பிச்சா கூட அதையெல்லாம் தொடர்ந்து நடத்த முடியாது. பாக்கத்தானே போறோம்’என்று கூறியிருக்கிறார்.

அப்போது ஒரு மாவட்டச் செயலாளர், ‘அம்மா இருந்தபோது கட்சி செலவுகளை எப்படிண்ணே சமாளிச்சாங்க?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘அம்மாவும் கட்சி செலவுகளுக்கு பல வகையிலும் கஷ்டப்பட்டாங்க. சில சமயம் கட்சிக்காக அம்மா கடன் கூட வாங்கியிருக்காங்க. அம்மாவாலயே சமாளிக்க முடியாததையா இந்த நடிகர்கள் சமாளிக்கப் போறாங்க. அதனால அவர்களை நினைச்சு பயப்பட வேணாம். தைரியமா எதிர்த்துப் பேசுங்க. இன்னும் சில வருடங்கள்தான் அவங்களால கட்சி நடத்த முடியும்’ என்று நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இந்தப் பின்னணியில்தான் ரஜினி, கமல் ஆகியோரை விளாசுகிறார். இந்தத் தாக்குதல் போகப் போகக் கடுமையாகும்” என்கிறார்கள் அதிமுகவில்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon