மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மாமனாருடன் மோதும் தனுஷ்?

மாமனாருடன் மோதும் தனுஷ்?

ரஜினியின் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘பட்டாஸ்’ படமும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. குறிப்பாக, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அப்பா-மகள் சென்டிமெண்ட் தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நயன்தாரா, அனைகா ஆகியோர் நடித்திருந்தனர். பேட்ட படத்தை சன் பிக்சர்ஸும், விஸ்வாசம் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது.

2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னரே அறிவித்துவிட்டது. இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவ்வருடத்தைப் போலவே, வரும் வருட பொங்கலுக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பட்டாஸ் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். சிநேகா, மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் வெற்றியால், தனுஷின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது பட்டாஸ் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், பொங்கலுக்கு பட்டாஸ் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்காது என்கின்றன திரைத்துறை வட்டாரங்கள்.

இதனால், 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் ’தர்பார்’, தனுஷின் ’பட்டாஸ்’ ஆகிய படங்கள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon