மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

வீழ்ச்சிப் பாதையில் தொழிற்துறை உற்பத்தி!

வீழ்ச்சிப் பாதையில் தொழிற்துறை உற்பத்தி!

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்தது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரவுகளின்படி, தற்போது உற்பத்தித் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. இது ஒரு வருடத்துக்கு முன்பிருந்த 4.8 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 3.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தித் துறையைப் பொறுத்தமட்டில், செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் 8.2 சதவிகித வளர்ச்சியுடன் இருந்த மின் உற்பத்தித் துறை தற்போது குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சுரங்க உற்பத்தியும் மதிப்பாய்வு செய்யப்பட்ட செப்டம்பர் மாதத்தில் 8.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், "தொழிற்துறையைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் உள்ள 23 தொழிற்துறை குழுக்களில் 17 துறைகள், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் செமி-டிரெய்லர்களின் உற்பத்தி -24.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மரச் சாமான்களை உற்பத்தி -23.6 சதவிகிதமும், உலோகப் பொருட்களின் உற்பத்தி -22 சதவிகிதமும் என எதிர்மறையான வளர்ச்சியையே காட்டியுள்ளது.

தொழிற்துறை உற்பத்தியின் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 4.3 சதவிகிதம் சுருங்கியது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக வேகமாக வீழ்ச்சியடைந்தது என்று அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 10ஆம் தேதி, நிதி தொடர்பான The Rise of Finance என்ற புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஜூன் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாகச் சரிந்தது. ஏனெனில் நுகர்வோர் தேவை குறைந்துகொண்டே வருவதாலும், மோசமான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், தனியார் முதலீடும் குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. இதனால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணவில்லை, இந்தியப் பொருளாதாரம் வலுவாகத் தான் இருக்கிறது என்று கூறி வந்த நிர்மலா சீதாராமன், தற்போது தான் இந்தியப் பொருளாதாரம் சில சவால்களை மேற்கண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறைந்துள்ள தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon