மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

சவுதி: பெண்ணியம், ஓரினச்சேர்க்கை - தீவிரவாத கருத்து!

சவுதி: பெண்ணியம், ஓரினச்சேர்க்கை - தீவிரவாத கருத்து!

பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் ஆகியவை தீவிரவாத கருத்துக்கள் என்று அடையாளப்படுத்தி சமீபத்தில் சவுதி அரேபியா அரசு சார்பில் வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா பல கட்டுபாடுகளுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக இந்த நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் சரிசமமாக இல்லை என்று பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. புதிதாக பதவியேற்ற இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததையடுத்து, பெண்கள் மீதான பழமைவாத பார்வை அந்நாட்டில் மாறிவருவதாக கருதப்பட்டது.

ஆனால், சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உரிமை வக்கீல்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இத்தகைய அனுமதிகள் குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் அரசு பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெண்ணியக் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றங்களே என்று கூறப்பட்டுள்ளது. பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரசு வகைப்படுத்துகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெயில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சவுதி அரேபியாவில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்வகையில் இளவரசர் முகமது பின் சல்மான், பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பயணிகள் விசா முதலியவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தியுள்ளார். அதே சமயம், கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை தொடர்ந்து சவுதி அரேபிய அரசு கைது செய்து வருகிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய பல பெண்களும், நாத்திகம், பெண்ணியம் உள்ளிட்ட கருத்துக்களை முன் வைக்கும் அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், அங்கு கருத்து சுதந்திரம் இல்லாத சூழலையே காட்டுகிறது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon