மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

கூட்டணியில் குழப்பம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி!

கூட்டணியில் குழப்பம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி!

மகாராஷ்டிராவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலில், தேசியாவாத காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று(நவம்பர் 11) அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் உள்ள நிலையில் சரத் பவார் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்கவுள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதல் பெரும்பான்மைக் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக, ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.

அதன் பின்னர், இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் அழைப்பு விடுத்தார். 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டின. ஆளுநரிடம் கூடுதலாக 2 நாட்கள் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்தார்.

சிவசேனா குறித்து முடிவு செய்யவும், மகாராஷ்டிரா அரசியல் சூழலை விவாதிக்கவும் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் இன்று (நவம்பர் 12) ஒரு கூட்டத்தை நடத்தவிருந்தன. இரு கட்சிகளைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் இன்று காலை 10 மணிக்கு இது குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கவுள்ளது என்றும் அஜித் பவார் ஆளுநரைச் சந்தித்த பின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மும்பைக்கு வருகை தரவிருந்த மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று காலை என்சிபி தலைவர் சரத் பவாரைச் சந்தித்து, என்சிபி - காங்கிரஸ் கூட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, "அவ்வாறு கூட்டம் இருப்பதாக யார் கூறுகிறார்கள்? எனக்குத் தெரியாது" என்று பதிலளித்துள்ளார். இதனிடையில், லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை சந்தித்து பேசினார் சரத் பவார்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக இத்துறை அளிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “என்சிபி மற்றும் காங்கிரஸ் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியைக் கொண்டிருக்கின்றன. இறுதி முடிவு ஒரு கூட்டு முடிவாக இருக்கும். என்சிபி உடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடன் கலந்துரையாடல்கள் முடிந்தவுடன் மட்டுமே நாங்கள் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து விட்டு, சிவசேனா குறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் அதன் பெயருக்கு களங்கம் ஏற்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவருவதால் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon