மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

உள்ளாட்சித் தேர்தல்: உச்சகட்ட குழப்பத்தில் அமமுக நிர்வாகிகள்!

உள்ளாட்சித் தேர்தல்: உச்சகட்ட குழப்பத்தில் அமமுக நிர்வாகிகள்!

அதிமுகவும், திமுகவும் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டன. இதையடுத்து அவ்விரு கட்சிகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.

இதேநேரத்தில் அமமுகவில் இருந்து உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தலைமையிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் அமமுக போட்டியிடாதோ என்று அக்கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.

உதாரணத்துக்கு சென்னையிலேயே குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிச் செயலாளர்களிடம், ‘உங்க பகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு வேட்பாளர்களை செலக்ட் பண்ணி வச்சிக்கங்க’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பகுதிச் செயலாளர்கள், அந்தந்த வார்டு வரையறைக்கு ஏற்ப வேட்பாளர்கள் பட்டியலை ரெடி செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் சென்னையிலேயே பல மாவட்டங்களில் இப்படி ஒரு அறிவுரையை மாவட்டச் செயலாளர்கள் பகுதிச் செயலாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் சென்னை மாநகரத்துக்குள் இருக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக பகுதிச் செயலாளர்கள், தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது, ‘உங்க மாவட்டம் வேட்பாளர் ரெடி பண்ணச் சொல்லிட்டாரு.ஆனா எங்க மாவட்டத்துக்கிட்டேர்ந்து அப்படி எந்த தகவலும் வரலையே. என்னவாயிருக்கும்?’என்று குழம்பித் தவிக்கின்றனர்.

சென்னை மாநகரத்துக்குள்ளேயே இப்படி என்றால் அமமுகவின் மற்ற மாவட்டங்களிலும் இதே குழப்பம்தான். பல பகுதிச் செயலாளர்கள் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட சின்னங்கள் தொடர்பான அறிவிப்பில்... பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் ஆன கட்சிகளுக்கு பொதுச் சின்னம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றும், தற்போது அங்கீகாரத்தை இழந்துள்ள கட்சிகளுக்கும் பொதுசின்னம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 3 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி விடுதலைச் சிறுத்தைகள், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் அமமுக இன்னும் பதிவு செய்யப்படவே இல்லை. எனவே அமமுகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்க எந்த வாய்ப்பும் இல்லை.

இந்தச் சூழலில் அமமுகவில் இருக்கும் வலிமையான செல்வாக்கு மிக்க நிர்வாகிகளுக்கு அதிமுக சார்பில், ‘அப்படியே இங்க வந்துடுங்க. உங்களுக்கு சீட் தருகிறோம்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே நேற்று மாலை அமமுக தலைமை அலுவலகத்தின் லேண்ட் லைன் நம்பரில் இருந்து அக்கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், ‘உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து அனுப்புங்கள்’என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon