மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

நள்ளிரவில் பேய் போல ’பிராங்க்’: 7 இளைஞர்கள் கைது!

நள்ளிரவில் பேய் போல ’பிராங்க்’: 7 இளைஞர்கள் கைது!

பெங்களூரைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் ‘பிராங்க்’ வீடியோ எடுப்பதற்காக, பேய் போல வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறத்தும் போக்கினால் பாதிப்படைந்த ஒரு பெண்ணின் கதையை பேசிய ஆடை திரைப்படம் அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியானது நினைவிருக்கலாம். பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் எவ்வாறு தலையிடுகின்றது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று இப்படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியது.

பிராங்க் வீடியோக்களுக்கென தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு. யூ டியூபில் பிராங்க் சேனல்கள் பல உலாவி வருகின்றன. இந்நிலையில், நேற்று(நவம்பர் 11) அதிகாலை பெங்களூரைச் சேர்ந்த 7 இளைஞர்கள், முன்பின் தெரியாத நபர்களை பிராங்க் வீடியோ எடுப்பதன் பேரில் அச்சுறுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர்களுள் ஒருவர், நள்ளிரவில் வெள்ளை நிற ஜிப்பா, தலையில் விக் அணிந்தபடி, பேய் போல வேடமிட்டு, சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், நடைபாதையில் உறங்குபவர்கள் என பொதுமக்களை அச்சுறுத்தியிருக்கிறார். பெங்களூர் வடமேற்குப் பகுதியில் உள்ள யஷ்வந்த்பூர், ஷரீஃப் நகரில் இந்த இளைஞர்கள், கடந்து செல்லும் மக்களை இவ்வாறு பயமுறுத்தி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், பிராங்க் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த, ஷான் மாலிக்(20), நவீத்(20), சஜீல் முகமது(21), சாகிப்(20), சயத் நபீல்(20), யூசுப் அஹமத்(20), முகமது அயூப்(20) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அனைவருமே மாணவர்கள் எனத் தெரிந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களில் மக்களை பார்க்கவைப்பதற்காக இந்த வீடியோக்களை எடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினர் மஃப்டியில் வந்திருப்பது கூட தெரியாமல், அவர்களையும் பயமுறுத்த முயற்சி செய்திருப்பது தான்.

பேய் வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்பவர்களை பயமுறுத்திய இந்த இளைஞர்களின் வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்வது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி மாணவர்களை எச்சரித்துள்ளார். நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்கி, பிரபலமடைவதற்காக அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றும் இந்த போக்கு ஆபத்தானது, ஏனெனில் மக்கள் இதனால் பாதிப்படையக்கூடும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மாணவர்கள் என்ற காரணத்தினால், அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ‘இனி இவ்வாறு பிராங்க் வீடியோ எடுக்கமாட்டோம்’ என குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதிமொழியைக் கொடுத்த பின்பு விடுவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், பிராங்க் ஷோ என அழைக்கப்படும் குறும்பு வீடியோ நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டது.மேலும் குறும்பு வீடியோக்களை படமாக்கவும் ,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதித்து உள்ளது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon