மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

கரூரில் பள்ளி மாணவி உயிரிழப்பு: இருதய பிரச்சினை காரணமா?

கரூரில் பள்ளி மாணவி உயிரிழப்பு: இருதய பிரச்சினை காரணமா?

கரூரில் பள்ளி கழிவறையில் மயக்கம் போட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் முதல் தெருவில் வசித்து வரும் ஆனந்தன், ராஜேஷ்வரி தம்பதியினரின் மகள் கோமதி(17). இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (நவம்பர் 11) காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கோமதி பிரேயர் மீட்டிங் தொடங்குவதற்கு முன்பு வரை தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். முகம் சோர்வாக இருந்ததையடுத்து முகம் கழுவுவதற்காக கழிவறைக்குச் சென்றுள்ளார், அப்போது அங்கேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோமதியை ஆசிரியர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

இதுகுறித்து தகவலறிந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், எஸ்.பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவிக்குப் பிறவியிலேயே இருதய பிரச்சினைகள் இருந்ததாகவும், இது கவனிக்கப்படாமல் இருந்ததால் மாணவிக்கு இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் உள்ளுறுப்பு பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் விசாரணை நடத்தி வருகின்றனர். 174ஆவது பிரிவின் (சந்தேக மரணம்) கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon