மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: என்சிபி-ஐ அழைத்த ஆளுநர்!

கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: என்சிபி-ஐ அழைத்த ஆளுநர்!

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, 105 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக, ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க நேற்று இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்தார்.

தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியமைக்க சிவசேனா நேற்று காலை முதல் பேச்சு வார்த்தையை துவங்கியது. முதல் கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையின்படி, சிவசேனா பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பதவி விலகுவதாகவும் அறிவித்தார்.

பாஜக சிவசேனா கூட்டணி முறிவைத் தொடர்ந்து, சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் சிவசேனா ஆதரவு கேட்டு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணி வெளியிலிருந்து ஆதரவு தருவதாக முதலில் செய்திகள் வெளியாகின.

சிவசேனா கேட்ட அவகாசம்: மறுத்த ஆளுநர்

சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் ஆளுநரை சந்திக்கும் நோக்கில் மும்பையில் உள்ள ராஜ் பவனை நேற்று மாலை 7 மணியளவில் அடைந்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, "சிவசேனை தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான அளவு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளிக்க ஆளுநரிடம் மூன்று நாள் கூடுதல் கால அவகாசம் கோரினோம். ஆனால், அவகாசமளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்” என்றார்.

இது தொடர்பான ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார். ஆனால், திங்கட்கிழமை இரவு ஆளுநரை சந்தித்த சிவசேனை கட்சி குழுவினர், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் கடிதத்தை அளிக்கவில்லை.

மேலும் மூன்று நாள்கள் அவகாசம் கோரினர். ஆனால், மேலும், கால அவகாசம் அளிக்க இயலாது என்று ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள நடைபெற்று வருகிறது என்றும் 7 மணிக்கு முன்பு வரை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் சார்பில் 8 மணியளவில் அறிக்கை வெளியானது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா நிலவரம் பற்றி அம்மாநில கட்சி நிர்வகிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சிவசேனையை ஆதரிப்பது பற்றி தேசியவாத காங்கிரஸ் உடன் ஆலோசனைகள் தொடரும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிபியை அழைத்த ஆளுநர்

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)க்கு ஆளுநர் நேற்று (நவம்பர் 11) இரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் தலைமையிலான குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்தனர்.

அப்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இன்று இரவு 8.30 மணிவரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்தார்.

ஆளுநர் சந்திப்புக்குப் பின் பேசிய ஜெயந்த் பாட்டீல், "ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்” என்றார்.

நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை

இதனைத் தொடர்ந்து சிவசேனா குறித்து முடிவு செய்யவும், மகாராஷ்டிரா அரசியல் சூழலை விவாதிக்கவும் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் இன்று (நவம்பர் 12) ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளன. இரு கட்சிகளைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.இன்று காலை 10 மணிக்கு இது குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கவுள்ளது.

இருப்பினும், தேசியவாத கட்சியின் உள் வட்டாரங்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் காங்கிரஸ் தலைமையை, சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க வைக்க பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பது தேசியவாத காங்கிரஸுக்கு கடினமாக இருக்கும் என்றும் அதே நேரத்தில் மாநிலம் ஜனாதிபதியின் ஆட்சியை நோக்கி செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு பாஜக மகாராஷ்டிரா நிலைமை குறித்த ஆலோசனையில் மீண்டும் இறங்கியது. இக்கூட்டத்திற்குப் பின் பேசிய பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கந்திவார், “பாஜக முக்கிய குழு கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பாஜக 'காத்திருந்து முடிவெடுப்போம்' என்ற நிலைப்பாட்டை எடுத்து வருகிறது” எனக் கூறியிருக்கிறார்.

தற்போதுள்ள சூழலில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நிலவுவதற்கான சூழலே அதிகம் இருப்பினும், கடைசி நேர மாற்றங்கள் ஏதும் நிகழுமா என இன்று நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரியவரும்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon