மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

ரூ.350 கோடி வருவாயை மறைத்த ஜேப்பியார் குழுமம்?

ரூ.350 கோடி வருவாயை மறைத்த ஜேப்பியார் குழுமம்?

ஜேப்பியார் கல்விக் குழுமம் ரூ.350 கோடி வருவாயைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜேப்பியார் குழுமத்துக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 7ஆம் தேதி முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர் கல்லூரி, பனிமலர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான்கு நாட்களாக இந்தச் சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வருமான வரித் துறை நேற்று (நவம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் கடந்த 7ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அந்த நிறுவனமானது கல்லூரி மாணவர்களிடம் வாங்கப்பட்ட கட்டணம் மற்றும் நன்கொடையைக் கணக்கில் காட்டாமல், வேறு நிறுவனங்களுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.3 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது.அத்துடன் அந்த குழுமம் ரூ.350 கோடி வருவாயைக் கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட உடைமைகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தக் கல்விக் குழுமத்திலிருந்து கைப்பற்றியுள்ளோம் என்று வருமான வரித் துறை அறிக்கையில் கூறப்படவில்லை. எனினும், அது ஜேப்பியார் கல்விக் குழுமத்தில்தான் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

திங்கள், 11 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon