மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

டிஜிட்டல் திண்ணை: திமுக பொதுக்குழுவில் உதயநிதிக்கு எதிர்க்குரல்!

டிஜிட்டல் திண்ணை:  திமுக பொதுக்குழுவில் உதயநிதிக்கு எதிர்க்குரல்!

மொபைல் டேட்டா ஆன் ஆனதும்,வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“திமுக பொதுக்குழு தொடங்கியதுமே, ‘யார் யார் பேச விரும்புகிறீர்கள்? சீட்டு கொடுங்கள்’என்று மேடையில் அறிவித்தனர். அதன்படியே பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் ஆகியோர் யார் யார் பேச விரும்புகிறீர்கள் என்று அரங்கத்துக்குள் இறங்கி ஆளுக்கொரு திசையில் சென்றனர். அவர்களிடம் பேச விரும்புவர்கள் தங்கள் விசிட்டிங் கார்டுகளை கொடுத்தனர். சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் பேச விரும்புவதை தலைமைக்கு தெரிவித்தனர்.

மேடையில் இருந்த தலைவரிடம் இந்த விசிட்டிங் கார்டுகள் கொடுக்கப்பட அவரே சில கார்டுகளை செலக்ட் செய்து கொடுத்தார். அவரது தேர்வு என்பது கட்சியில் பெரிதாக அறிமுகம் இல்லாத உள் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அதாவது வழக்கமாக பொதுக்குழுவில் பிளந்துகட்டும் பிரபலங்களுக்கு இம்முறை அதிக வாய்ப்பில்லை. பத்து பேர்தான் பொதுக்குழுவில் பேசினார்கள். அதில் குத்தாலம் கல்யாணத்தை தவிர யாரும் பிரபலமானவர்கள் கிடையாது.

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மேல்புரம் ஒன்றிய செயலாளர் சிற்றாறு ரவிச்சந்திரன் எழுந்து, ‘எங்களை கட்சியில் செயல்படுவதற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் அனுமதிப்பதே இல்லை. ஒரு கூட்டம் போட்டால் கூட கூடாது என்கிறார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு போனால் எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு ஆளை விட்டு மிரட்டுகிறார். சொந்தக் கட்சியிலேயே எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிக் காரனைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவையில்லை. ஆனா உள்கட்சிக்காரனைப் பார்த்து பயப்பட வேண்டிய கட்டத்துல இருக்கேன். தலைவர்தான் என்னைக் காப்பாத்தணும்’என்று வேண்டுகோள் வைத்தார்.

கோவை மேட்டுப் பாளையம் நகர செயலாளர், பேசும்போது, ‘எங்க மாவட்டத்துல 17 கோஷ்டி இருக்கு. இப்ப நான் பேசிட்டு ஊருக்குப் போகும்போது என் பதவி இருக்குமானு தெரியலை’ என்று தொடங்கினார். குறுக்கிட்ட துரைமுருகன், ‘கோஷ்டிதான்யா வளர்ச்சியின் அறிகுறி. கோஷ்டி இருந்தாதான் போட்டி போட்டுக்கிட்டு கட்சி வளருதுன்னு அர்த்தம். ஆனா அது போட்டியாக இருக்கணும். பொறாமையா மாறிடக்கூடாது ‘என்று சொல்ல, உடனே சில மாவட்டச் செயலாளர்கள், ‘அப்புறம் ஏன் வேலூர்ல பல பேரை கட்சியிலேர்ந்தே நீக்கணும்?’என்று கேட்டனர் பின்பக்கம் இருந்து.

பழைய மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம் பேச்சுதான் வழக்கம்போல பல்வேறு திமுகவினரின் மனசாட்சியாக ஒலித்தது. ‘வாரிசுகள் எல்லாமே வாரிசுகள் அல்ல. வாரிசுகளுக்கும் தகுதியும் திறமையும் வேண்டும். வெறும் வாரிசுகளா மட்டும் இருக்கக் கூடாது. அவர்கள் தங்கள் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கணும். தளபதியை தலைவர் சும்மா கொண்டுவந்துவிடவில்லை. பல்வேறு கட்டங்களில் பல்வேறு பொறுப்புகள் கொடுத்து புடம் போட்டு பல்வேறு சோதனைகளை வைத்தார். தனக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு சோதனையையும் சரியாகப் பயன்படுத்தி தன்னையும் வளர்த்து கட்சியையும் வளர்த்தார் தளபதி.

இன்று வாரிசாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் உதயநிதியை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம், கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தனது தந்தையிடமிருந்து இன்னும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்’என்று பேசினார். ஒருவேளை குத்தாலம் கல்யாணத்தை ஸ்டாலினே இந்த சப்ஜெக்ட்டை பேச வைத்திருப்பாரோ என்று பொதுக் குழுமுடிந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே சில மாசெக்கள் விவாதித்தனர்.

மேட்டுப் பாளையம் ஒன்றிய செயலாளர் பேசும்போது, ‘தலைவரே நீங்க முஸ்லிம் பண்டிகைக்கு, கிறிஸ்டியன் பண்டிகைக்கல்லாம் வாழ்த்து சொல்றீங்க. அதுபோல இந்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லணும்’ என்று பகிரங்கமாக கோரிக்கை வைத்தார்.

பெண்களில் மூவரும் பேசினார்கள். ‘மகளிரணிக்கு முக்கியத்துவமே இல்லை. மூன்றில் ஒரு பங்காவது மகளிரணிக்கு இடம் கொடுங்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை நாம் கொள்கையாகவே வைத்திருக்கிறோம். எனவே பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கவேண்டும்’என்று சொல்ல தலைவர் ஸ்டாலின் அவர்களைப் பார்த்து சரி என்பது போல தலையாட்டி அமர வைத்தார்.

திமுக பொதுக்குழுவைத் தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், ‘பொதுக்குழுவில் பலரும் மாவட்டச் செயலாளர்களை குற்றம் சாட்டிதான் பேசினார்கள். அதனால் சில மாவட்டச் செயலாளர்கள் மேல் நான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கட் அன் ரைட்டாக அறிவித்திருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon