மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

கபில் தேவின் நடராஜர் ‘ஷாட்’: ரன்வீருக்குக் குவியும் பாராட்டு!

கபில் தேவின் நடராஜர் ‘ஷாட்’: ரன்வீருக்குக் குவியும் பாராட்டு!

‘83’ திரைப்படத்தில் கபில் தேவ் பாத்திரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்கின் புதிய புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுடனான கடைசி போட்டியில் வென்ற வரலாற்று நிகழ்ச்சியை எந்த கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்த வரலாற்றை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறது பாலிவுட்.

இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்தாக ஜீவா, சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாஸின், வெங்சர்கராக ஆதிநாத் கோத்தாரியும் நடித்து வருகின்றனர். கபில் தேவின் மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியான நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக, முறையான கிரிக்கெட் பயற்சியை ரன்வீருக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில் தேவே உடனிருந்து கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், ‘83’ படத்தில் நடிக்கும் ரன்வீரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. கபில் தேவின் தனித்துவமான ‘ஷாட்’ ஆக கருதப்படும் நடராஜர் ஷாட்டை இந்தப் புகைப்படத்தில் பிரதிபலித்திருக்கிறார் ரன்வீர் சிங். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து, ரசிகர்கள் ரன்வீர் தோற்றத்திலும் உடல்மொழியிலும் அப்படியே கபில் தேவ்வைக் கொண்டு வந்துள்ளார் எனப் படத்தின் நாயகனைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கபில் தேவ், ரன்வீர் சிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘ஏக் தா டைகர்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ போன்ற இந்தி படங்களை இயக்கிய கபிர் கான் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட உள்ளது. அடுத்த வரும் ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

திங்கள், 11 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon