மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 21 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா: பருப்பு ரசம்

கிச்சன் கீர்த்தனா: பருப்பு ரசம்

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை முதலில் இனிப்பு செய்யச் சொல்வது வழக்கம். அதற்கு அடுத்ததாக அவ்வீட்டில் உள்ள பெரியவர்கள் ரசம் வைக்கச் சொல்வார்களாம். ஏனெனில் ரசம் மட்டும் சுவையாக வைத்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு நன்கு சமைக்கத் தெரியும் என்று அர்த்தமாம்.

என்ன தேவை?

தக்காளி - ஒன்று

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

பூண்டு - 5 பல்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பருப்புத் தண்ணீர் - 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர்)

எப்படிச் செய்வது?

புளியைச் சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயைக் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைக் கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் தட்டிவைத்துள்ள பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சிறிதளவு இதனுடன் சேர்த்துத் தாளிக்கவும். அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாகக் கொதிக்க விடவும். பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். கொதி வரும்போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை ரசத்தின் மேலே தூவவும். சுவையான பருப்பு ரசம் தயார்.

குறிப்பு

பருப்பு ரசம் கொதிக்கக் கூடாது. ஆனால் புளி, தக்காளி ரசத்தைக் கொதிக்க விட்டால்தான் அதன் பச்சை வாசனை போகும்.

நேற்றைய ரெசிப்பி: மிளகு ரசம்

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது