மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

முறிந்தது பாஜக-சிவசேனா கூட்டணி!

முறிந்தது பாஜக-சிவசேனா கூட்டணி!

மகாராஷ்டிராவில் இன்று மாலை 7.30மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில், சிவசேனா - பாஜகவுடன் இருந்த தனது 35 வருட கூட்டணியை முறித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, 105 எம்எல்ஏக்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.

இதையடுத்து, 56 எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது பெரும்பான்மையைப் பெற்ற சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று (நவம்பர் 11) இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 எம்.எல்.ஏ.க்களைக்கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்.எல்.ஏ.க்களைக்கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனா கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை கூறியது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகவேண்டும், சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை தேசியவாத காங்கிரஸ் விதித்தது.

அரவிந்த் சாவந்த் ராஜினாமா

இந்நிலையில், சிவசேனா எம்.பி.யும், மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றிக்குப் பின் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

மும்பையில் உள்ள செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் சாவந்த், "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதி ஒதுக்கீடும், அதிகாரப் பகிர்வும் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடாக இருந்தது. இருதரப்பும் ஒப்புக்கொண்டார்கள். இப்போது, அந்த ஒப்பந்தத்தை மறுப்பது சிவசேனாவுக்கான மிரட்டலாகும். மகாராஷ்டிராவில் பொய்களைப் பின்தொடர்வதற்காக பாஜக நீண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உண்மையின் பக்கம் சிவசேனா எப்போதும் நிற்கும். இப்படிப்பட்ட சூழலில் நான் எதற்காக மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டும். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அனுப்பி இருக்கிறேன்" எனத் தெரிவித்தார். இதன் மூலம், 35 வருட காலமாக இருந்த பாஜக-சிவசேனாவின் கூட்டணி முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது சிவசேனா.

பாஜகவின் அகங்காரம் தான் இந்த சூழலை உருவாக்கியது: சஞ்சய் ராவத்

இந்நிலையில், மும்பையில் சிவசேனா எம்.பி.யும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,''மகாராஷ்டிர மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக அவமதித்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தை சரிபாதியாகப் பிரித்துக்கொள்வது தொடர்பாக மக்களவைத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி தற்போது பாஜக நடக்கிறது. பாஜகவின் அகங்காரத்தால்தான் தற்போது அக்கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பமாக இருக்கிறது. முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்ற பாஜகவின் அகங்காரம்தான் சூழலை இந்த அளவுக்கு மோசமாக்கி இருக்கிறது.

எங்களிடம் அளித்த வாக்குறுதியை பாஜக காப்பாற்ற முடியாவிட்டால், இனிமேல் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை. பாஜகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி 72 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஆனால், சிவசேனாவுக்கு வெறும் 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து மகாராஷ்டிர மாநிலத்தின் நலனுக்காகக் குறைந்த செயல்திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

தற்போது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வீட்டில், சஞ்சய் ராவத் கூட்டணி குறித்த ஆலோசனையில் இருக்கின்றார். அதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று பிற்பகலில் சந்தித்துப் பேச சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசி முடிவு எடுக்க உள்ளார்.

இந்நிலையில், சரத் பவார் மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " சிவசேனா கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது தொடர்பாக எங்கள் கட்சிக்குள் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை. தேர்தலில் எங்கள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட்டன. ஆதலால் எந்த முடிவாக இருந்தாலும் இரு கட்சிகளும் சேர்ந்துதான் எடுக்க முடியும். ஆதலால் காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்த கட்சியின் முக்கிய குழு கூட்டத்திற்குப் பிறகு தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் நவாப் மாலிக், “காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிவசேனா தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஆதரவாக உள்ளனர், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அவர்களின் கட்சி அடிப்படையில் தீர்மானிப்பதே இறுதி முடிவாகும்” எனக் கூறியுள்ளார்.

அதே வேளையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் டெல்லியில் இன்று காலை முதல் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலைக்குள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை நேரிடையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில், மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 11 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon