மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 11 ஆக 2020

பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை: அயோத்தி தீர்ப்பின் முதல் கட்ட விவரம்!

பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை: அயோத்தி தீர்ப்பின் முதல் கட்ட விவரம்!

இந்தியா மட்டுமல்ல உலகத்தையே எதிர்பார்க்க வைத்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை 10.31க்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசிக்க ஆரம்பித்தார்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி விசுவ இந்து பரிசத், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், இந்து மகாசபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் மூலம் இடிக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினருக்கும் சமமாக சர்ச்சைக்குரிய நிலத்தை தந்துவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்று பல ஆண்டுகள் விசாரணை நடைபெற்ற நிலையில் மத்தியஸ்தர் குழுவும் உதவாத நிலையில் இறுதி விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து இன்று தீர்ப்பு தேதி குறிக்கப்பட்டது.

காலை 10.20 மணிக்கெல்லாம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே,சந்திர சூட், அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் நீதிமன்ற சேம்பருக்கு தீர்ப்பு நகல்கள் கொண்டுவரப்பட்டன. உச்ச நீதிமன்ற வளாகம் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில்,

இந்தியாவே எதிர்பார்த்த இந்தத் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 10. 31 மணிக்கு வாசிக்க ஆரம்பித்தார்.

இந்தத் தீர்ப்பு 5 நீதிபதிகளாலும் ஒரு மனதாக எழுதப்பட்டிருப்பதாக முதலில் ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

முதலில் பாபரால் மசூதி கட்டப்படவில்லை என்று கூறிய ஷியா வஃக்ப் வாரிய மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் தலைமை நீதிபதி. மேலும் 4 நீதிபதிகளும் ஷியா வஃக்ப் வாரிய மனுக்களை தள்ளுபடி செய்தனர். மசூதியை பாபரின் தளபதிதான் கட்டினார் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுமக்களின் நம்பிக்கையில் நீதிமன்றங்கள் எப்போதுமே தலையிடுவதில்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி தொடர்ந்து தன் தீர்ப்பை வாசித்தார்.

மேலும் பாபர் மசூதிக்கு கீழே இருந்தது இஸ்லாமிய கட்டிடம் அல்ல என்பதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை. அதேநேரம் கோயிலை இடித்தும் மசூதி கட்டப்பட்டதாகவும் தொல் பொருள் ஆய்வுத்துறை சொல்லவில்லை. அதேநேரம் மசூதியின் கீழ் இருக்கும் கட்டிடப் பொருட்கள் இஸ்லாமியத் தன்மை கொண்டதாகவும் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை 'மறுக்க முடியாதது' என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. 'நம்பிக்கை என்பது தனிப்பட்ட விசுவாசியின் விஷயம் . அந்த இடத்தில் இந்துக்களின் நம்பிக்கையை தள்ளுபடி செய்ய எந்த ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை' என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

தீர்ப்பு வாசித்து முடிக்க அரைமணி நேரம் ஆகும் என்று உச்ச நீதிமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

தீர்ப்பு தகவல்கள் தொடரும்....

சனி, 9 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon