மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஸ்பிரிங் ரோல்

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஸ்பிரிங் ரோல்

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதது. எனவே, வாரத்துக்கு இரண்டு நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம். மேலும், வெஜ் சான்ட்விச், எக் சான்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்த வரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்துவைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே செய்து சூடாகச் சாப்பிடுவதற்கு இந்த வெஜ் ஸ்பிரிங் ரோல் சிறந்தது.

என்ன தேவை?

மைதா மாவு, நவதானிய மாவு (மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - தலா அரை கப்

முளைகட்டிய நவதானியம் (பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப்

பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை (சேர்த்து) - ஒரு கப்

உருளைக்கிழங்கு - ஒன்று

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா இலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முளைகட்டிய நவதானியத்தைக் கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon