மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மாவோயிஸ்ட்களும் மார்க்சிஸ்ட்களும்! கேரள மாநில தத்துவ முரண்...

மாவோயிஸ்ட்களும்  மார்க்சிஸ்ட்களும்!  கேரள மாநில தத்துவ முரண்...

ச.அன்வர்

நிறைய நண்பர்கள் முகநூலிலும் சுட்டுரையிலும் கேரளத்தில் சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட் என்கவுண்டர்கள் குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்....

கிட்டத்தட்ட எல்லோருமே வயநாடு மாவட்டத்தின் ஆதிவாசி மக்களின் கதாநாயகனாக அறியப்பட்ட பெருமான் சகாவு வர்கீஸ் பற்றி எழுத மறக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி.

1960 களின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் தொடக்கத்திலும் தான்வயநாடு மாவட்டத்தில் மாவோயிச சிந்தனை வேர் கொண்டு விரிய ஆரம்பித்தது. வனவளமும் நீர்வளமும் நிலவளமும் மிகுந்த மலையாள மண்ணிற்கு, மாவோயிஸ்டுகள் வரவேண்டிய தேவை எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது... அப்படிப்பார்த்தால் கனிம வளம் மிகுந்த சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஏன் வந்தார்கள் என்ற கேள்வியும் கூடவே பிறக்கிறது...

சத்தீஸ்கருக்கு மாவோயிஸ்டுகள் சென்றதற்கு பின்னால் இருந்தது. வேதாந்தா போன்ற பன்னாட்டு பண வேதாளங்கள். அடிமாட்டு விலைக்கு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கனிம வளங்களைச் சூறையாட வந்தவர்களுக்கு எதிராகவே சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் உள்ளூர் ஆதிவாசிகளுடன் இணைந்து ஆயுதம் தூக்கினார்கள்.

ஆனால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலைமை வேறு... ஆதிவாசிகள் நிறைந்த வயநாடு மாவட்டம்.. வாழ்க்கைத் தரத்தில் மட்டுமல்லாது, கல்வி அறிவிலும், உரிமை இழப்பிலும் அவர்கள் பின்தங்கி இருந்ததால்தான் மாவோயிஸ்டுகளுடைய பார்வை வயநாடு மாவட்டத்தை நோக்கி திரும்பியது.

சத்தீஸ்கரில் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகளால்... வயநாடு மாவட்டத்தில் உள்ளூர் ஆதிவாசிகளின் ஆதரவை முழுமையாக பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை.. சகாவு வர்க்கீஸ் படுகொலைக்குப் பின்னால்...கிட்டத்தட்ட மாவோயிஸ்டுகள் வயநாடு மாவட்டத்தில் செயலிழந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

ஏனென்றால் உள்ளூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இடதுசாரி இயக்கங்கள் அங்கு வலுவாக இருந்தது இன்னொரு காரணம். மேலாக அப்பழுக்கற்ற மார்க்சிய தலைவர்கள் அன்றைய காலகட்டத்தில் மலையாள நாடெங்கும் நிறைந்து இருந்தார்கள் என்பது இன்னொரு உண்மை.

தோழர் ஜி கே ஜானுவின் தலைமையிலான ஆதிவாசி கோத்ரா மகாசபா... ஆயுதப் பாதைக்கு சென்று, ஆதிவாசி மக்களுடைய உரிமையை பெறுவதற்கு முயற்சி எடுத்து இருக்குமானால்... மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இன்று நீக்கமற நிறைந்திருக்கும்.

ஆனால் மலையாள நாட்டின் அதிர்ஷ்டம்... ஜி.கே. ஜானுவும், கீதானந்தனும் ஆயுதப் பாதைக்கு செல்வதற்கு பதிலாக... திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தின் முன் குடிசையைப் போட்டு தங்களுடைய ஜனநாயகப் பற்றை வெளிப்படுத்தினார்கள்... அதனால் கேரளா தப்பித்தது என்பதுதான் உண்மை.

பெருவாரியான ஆதிவாசி மக்கள் தோழர் ஜிகே ஜானுவின் அடியொற்றி நடந்ததால், மாவோயிஸ்டுகளால் வயநாடு மாவட்ட ஆதிவாசி மக்களிடையே வலுவாக காலூன்ற முடியவில்லை. ஆனாலும் அவர்கள் அந்த மண்ணில் மரணித்து விடாமல்... அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி... வயநாடு மாவட்டத்தில் உள்ள வெள்ளமுண்டா வனப்பகுதியில்... நேருக்கு நேராக மோதிக் கொண்டார்கள் மாவோயிஸ்ட் தடுப்புப் படையும்... மாவோயிஸ்டுகளும்...பொறி பரந்த அந்தத் துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும்... நீண்ட நாட்களுக்கு பின்னர் மாவோயிஸ்டுகள் உயிர் பெற்றிருப்பதை கேரள அரசால் உணரமுடிந்தது.

அதிலிருந்து சரியாக 13 நாட்கள் கழித்து... அதாவது டிசம்பர் 20 ஆம் தேதி, பாலக்காடு மாவட்டத்தில் சந்திரா நகர் பகுதியில் இருந்த அமெரிக்க பின்னணி கொண்ட கேஎஃப்சி ரெஸ்டாரண்ட் மீது தாக்குதலை நடத்தியது ஒரு மாவோயிஸ்ட் குழு. தாக்குதல் நடத்தியதோடு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி கலைந்து சென்றார்கள்.

அதே சமநேரத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதிக்குட்பட்ட,,,, வன சம்ரக்ஷன சமிதி என்ற வனத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது இன்னொரு மாவோயிஸ்ட் குழு. இந்தப் பகுதி அட்டப்பாடி ரேஞ்சிற்குள் வருவதால் கேரள அரசு செய்வதறியாது திகைத்தது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதப் புரட்சிக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கையையும் வீசிச் சென்றார்கள்.கூடுதலாக இரண்டாவது முறையாக வயநாடு மாவட்டத்தில் உள்ள வெள்ளமுண்டா வனப்பகுதியில் உள்ள இன்னொரு வனத்துறை அலுவலகத்தையும் சூறையாடிச் சென்றது மாவோயிஸ்ட் குழு ஒன்று.

கேரள மாநிலம் அதிர்ச்சியில் உறைந்தது.ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிஞ்சித்தும் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இறுதியில் கேரள காவல்துறை ஸ்ரீகாந்த் பிரபாகரன், அருண் பாலன் என்கிற இரண்டு கல்லூரி மாணவர்களை சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கருதி கைது செய்தது. விஷயம் என்னவென்றால் இருவரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள்.

அடுத்தடுத்த நாட்களில் காவல்துறை செய்த அறிவிப்பு கேரள மக்களை முகம் சுளிக்க வைத்தது... மாவோயிஸ்ட் தாக்குதலில் தொடர்புடைய தாக காவல்துறை குற்றம்சாட்டிய ஸ்ரீகாந்த் பிரபாகரன் வீட்டில் மாவோயிச இலக்கிய புத்தகங்களும், சமையலறையில் பயன்படுத்திய கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.

கடைசியில் 2 மாணவர்களையும் UAPA சட்டத்தில் கைது செய்து தன்னுடைய ஆசையைத் தீர்த்துக் கொண்டது. இன்று வரை புரியாத புதிராக நீடித்துக் கொண்டிருக்கிறது அந்த தாக்குதல்கள்.

இந்த நிலையில்தான் மறுபடியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா நகருக்கு அருகில் ஒரு தாக்குதலை நடத்தியது மாவோயிசக்குழு.

வழக்கத்திற்கு மாறாக... வாளையார் மாவோயிஸ்ட் என்கவுண்டரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சர்ச்சையில் சிக்கி இருப்பதால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

ஆதிவாசி மக்களின் ஏகோபித்த தலைவியான தோழர் ஜிகே ஜானு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து கொண்டிருப்பதால்... பெரிய அளவிற்கு இந்த என்கவுண்டருக்கு எதிராக அவரால் எதுவும் பேச முடியவில்லை.

வழக்கமாக பினராயிக்கு எதிராக என்றால்... வார்த்தைகளாலேயே ஜாலம் செய்யும் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனையும் காணவில்லை.

வாளையார் சிறுமிகள் கற்பழிப்பில் விடுவிக்கப்பட்ட மார்க்சிய குண்டர்களுக்கு எதிராக கேரளம் முழுவதும் உக்கிரமான அலை எழுந்த நேரத்தில்... பினராயி அரசு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருப்பதாக கொந்தளிக்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

இது இன்று மட்டும் நடக்கவில்லை கேரளத்தில்... வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து தலைவராக இருந்த தமிழர் பாலுவின் படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மோகனன் தலைமையிலான மார்க்சிய குண்டர்களை...தண்டனைக்காலம் முடியும் முன்பே, இந்த அரசு பதவியேற்றதும் சுதந்திரமாக வெளியே உலவ விட்டவர் தான் தோழர் பினராயி விஜயன்.

குற்றவாளி எத்தகைய தன்மை படைத்தவராக இருந்தாலும், அவன் மார்க்சிஸ்ட்டாக இருந்தால் மட்டும் போதும்... அவனுக்கு உடனடியாக விடுதலை உண்டு. எது எப்படியோ பாலா வட்டியூர்காவு கோனி ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றியின் மூலம் இன்னமும் தான் ஒரு அசைக்க முடியாத முதல்வர் என்ற நம்பிக்கையிலேயே நீடிக்கிறார் தோழர் பினராயி விஜயன்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon