மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ரஜினிக்கு காவி சாயம் பூச முயற்சியா? தலைவர்கள் கருத்து!

ரஜினிக்கு காவி சாயம் பூச முயற்சியா? தலைவர்கள் கருத்து!

காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்ற ரஜினியின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்வு நேற்று (நவம்பர் 8) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “ எனக்கு பாஜக சாயத்தை பூச முயற்சி செய்துவருகிறார்கள். திருவள்ளுவர் போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டமாட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் தற்போதும் சரியான தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக கருத்து தெரிவித்தார்.

ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு இந்த ஆண்டில் மிகச்சிறந்தது. ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, மதவாதி அல்ல. ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார். அப்படி வந்தாலும் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இரண்டு வார்த்தைகளில் தனது முழுக்கொள்கையையும் அவர் விளக்கியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்று வரவேற்றுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், “தன் மீது காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்திருப்பதற்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கிறேன். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் மீது காவி சாயம் பூசிவிடுவார்கள் என்று நான் ஏற்கனவே நட்பின் அடிப்படையில் ரஜினிகாந்த்திடம் சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது துணிச்சலாகப் பேசியிருக்கிறார். அவர் விழிப்புடன் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

பாஜக ரஜினியை அழைக்கவில்லை என்று பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினி, பாஜகவில் சேர்வார் என நாங்கள் ஒரு போதும் கூறவில்லை. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுள் மறுப்பாளர்களும் திருவள்ளுவர் போதித்த வாழ்க்கை நெறிமுறைகளை போற்றுகின்றனர். திருக்குறள் தமிழர்களுக்கு மட்டும் அல்ல இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கே பொதுவானது” என்று கருத்து தெரிவித்தார்.

வெற்றிடம் இல்லை: திமுக, அதிமுக

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “ரஜினி சொல்லும் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்டகாலம் ஆகிவிட்டது. ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியலில் இருந்திருந்தால் இது அவருக்கு தெரிந்திருக்கும். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருப்பதால் தமிழக அரசியலின் தட்ப வெப்பநிலை அவருக்கு தெரியவில்லை. நேரடியாக அரசியலுக்கு வரும்போது வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பியதை புரிந்துகொள்வார். ரஜினி மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர் யாருக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா இழப்பு ஒரு வெற்றிடம்தான். அந்த வெற்றிடம் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் எண்ணம் கட்சியும், ஆட்சியும் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த எண்ணம் இன்று நிறைவேற்றப்படுகிறது. அப்படியென்றால் வெற்றிடத்துக்கு வாய்ப்பில்லையே. மக்களுடைய தீர்ப்பு எங்கள் பக்கம் இருக்கும் போது வெற்றிடம் என்பது இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon